எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரசாரத்தை முறியடிக்கும் பொதுக் கூட்டம் இன்று மாலை திருச்சியில் பாஜக சார்பில் நடைபெறவுள்ளது என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் நீட் தேர்வு அனாவசியமாக அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கிறது என்பது நேற்றைய தினம் வெளியாகி உள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கூட அதிக இடங்கள் கிடைத்திருக்கிறது. சமூக நீதியும், சம நீதியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம், கிராமப்புற மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் மாணவர்களை குழப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த அரசியல் எதிர்மறையை நினைத்து சனிக்கிழமை (இன்று) பாஜக சார்பில் திருச்சி உழவர் சந்தையில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரசாரத்தை முறியடிக்கவும், நீட் தேர்வில் உள்ள உண்மை நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவுமே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காமல் மன உளைச்சலில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது உயிரிழப்புக்கு மத்திய-மாநில அரசுகள் தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதேபோல், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அறவழியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.