”தீவிரவாதம் தலை தூக்கக்கூடாது”: திவ்யபாரதி கைது குறித்து தமிழிசை

"நாட்டில் தீவிரவாதம் எந்த வகையிலும் தலை தூக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும்”, என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

“நாட்டில் தீவிரவாதம் எந்த வகையிலும் தலை தூக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும்”, என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

14-வது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் செவ்வாய் கிழமை பதவியேற்றுக் கொண்டநிலையில், அந்த கொண்டாட்டத்தில் பங்கு கொள்ளும் விதமாக, சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வந்தார்.

அவரிடம், ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “பின்புலம் இல்லாமல், குற்றச்சாட்டு இல்லாமல் யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள். நக்சலைட் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் எந்தவகையிலும் தீவிரவாதம் தலைதூக்காமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. அதேநேரத்தில் ஒரு குற்றவாளி தப்பிவிடக்கூடாது என்பதிலும் அரசு கவனமாக இருக்க வேண்டும்.”, என தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2009-ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், எட்டு ஆண்டுகள் கழித்து ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை மதுரையில் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட திவ்ய பாரதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆஜர்படுத்துவதற்கு முன்பாக நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திவ்ய பாரதி, “கடந்த 2009-ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது, தலித் மாணவர் விடுதியில் பாம்பு கடித்து மாணவர் ஒருவர் இறந்துபோனார். இதையடுத்து, தலித் மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இறந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, அப்போது என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இப்போது, 8 ஆண்டுகள் கழித்து அந்த வழக்கில் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்து என்னை கைது செய்துள்ளது. தொடர்ந்து அரசியல் செயல்பாட்டில் இருப்பவர்களை முடக்குவதற்காக அரசு அவர்களை கைது செய்வது வழக்கமான ஒன்றுதான்.”, என கூறினார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான திவ்ய பாரதியை வரும் ஆகஸ்டு மாதம் 8-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக திவ்யபாரதி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்றுக்கொண்ட நீதிமன்றம் திவ்யபாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் ஒருவாரம் தினமும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

×Close
×Close