பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் எல்.முருகனை அமைச்சராக்கியதன் மூலம் தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சராக இடம் பெற்றுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து முதல்முறையாக அருந்ததியர் சமூகத்தில் இருந்து ஒருவர் மத்திய அமைச்சராகியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அளித்திருப்பதன் மூலம் பாஜக தமிழ்நாட்டில் என்ன மாதிரியான அரசியல் வியூகத்தை மேற்கொள்ள திட்டமிடுகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பாஜக தமிழ்நாடு அரசியலில் எத்தகைய நகர்வை மேற்க்கொள்கிறது, பாஜகவின் வியூகம் என்ன என்று பேராசிரியர் சி.லட்சுமணன் அவர்களிடம் பேசினோம். அவர் ஐ.இ. தமிழுக்கு கூறியதாவது: பாஜக தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனை மத்திய அமைச்சராக்கி இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவை பெரியாரின் சமூகநீதி அரசியலை நோக்கி தள்ளப்பட்டிருப்பதாக கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.
பாஜகவின் மத்திய அமைச்சரவை மாற்றம் என்பது வருகிற உத்தரப்பிரதேச தேர்தலை மனதில் வைத்தே இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்கள் (ஓபிசி) அதிக எண்ணிகையில் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். அது உ.பி. தேர்தலில் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இது பாஜகவின் மிகவும் முன்கூட்டியே எச்சரிக்கையான திட்டமிடலாக இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பட்டியல் இனத்தில் அருந்ததியர் சமூகத்தில் இருந்து எல்.முருகனை மத்திய அமைச்சராக்கி இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் இருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினருக்கும் ஒரு அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
பாஜக தமிழ்நாட்டில் ஏற்கெனவே, கொங்கு கவுண்டர்கள், நாடார்கள், வன்னியர்கள், தேவர்கள் உள்ளிட்ட 4 - 5 சமூகத்தினரை கணிசமாக தங்கள் கட்சிக்குள் இணைத்துள்ளனர். இதற்கு முன்பு, நாடார் சமூகத்தில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அதனால், இந்தமுறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் அமைச்சராக்கப்பட்டுள்ளார். வரும் காலத்தில் பாஜக பட்டியல் சமூகத்தில் வேறு ஏதாவது ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
அதிமுகவின் ஆதரவு தளமாக இருந்த அருந்ததியர்களை 3 சதவீத உள் இடஒதுக்கீடு மூலம் அவர்களை கருணாநிதி திமுகவுக்கு கொண்டுவந்தார். பாஜக ஏற்கெனவே எல்.முருகனுக்கு மாநில தலைவர் பதவியை அளித்திருந்தது. தற்போது மத்திய அமைச்சர் பதவியைக் கொடுத்து பாஜக அருந்ததியர்களை தங்களை நோக்கி ஈர்த்துள்ளது. அருந்ததியர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைக்கு பாஜகவின் இத்தகைய நகர்வு தற்காலிக அரசியல் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
அதே போல, பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குல வேளார்கள் சமுகத்தினர் பெயர் மாற்றக் கோரிகையை முன்வைத்தபோது, பாஜக பெயர் மாற்றத்தை அறிவித்ததன் மூலம், கிருஷ்ணசாமி தலைமையில் இருப்பவர்கள் ஏற்கெனவே பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்கள். பறையர்களில் வேறு யாராவது பாஜக ஆதரவுடன் வந்தால் அவர்களுக்கும் இத்தகைய வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், பறையர் சமூகத்தினர் வரலாற்று ரீதியாகவே, சாதி ஒழிப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, எதிர்ப்பு அரசியல் என்று இருந்துவருகிறார்கள். அதனால், அதற்கான சாத்தியம் இல்லை என்பதால், பட்டியல் சமூகத்தில் உள்ள அருந்ததியர்களை ஈர்க்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பாஜகவின் இந்த நகர்வு நிச்சயமாக ஏற்கெனவே இங்குள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு பெரிய ‘செக்’தான். இதையெல்லாம் பாஜக 2024 லோக் சபா தேர்தலை கருத்தில்கொண்டு முன்கூட்டியே மிகவும் எச்சரிக்கையாக செயல்படத் தொடங்கியுள்ளது.” என்று கூறினார்.
பெரியார், சமூக நீதி, இட ஒதுக்கீடு, இந்துத்துவ எதிர்ப்பு போன்ற அரசியலை பேசும் திமுக மற்றும் திராவிட இயக்கங்களின் அரசிலை பாஜக ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை முன்னிறுத்துவதன் மூலம் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.