கடுமையான எதிர்ப்புக்கிடையே சென்னை வந்து சென்றார், பிரதமர் மோடி!

சென்னை ராணுவ கண்காட்சியில் பங்கேற்க வரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம். சென்னையின் முக்கியப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று துவங்கிய ராணுவ தளவாடக் கண்காட்சியில் பங்கேற்கப் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காகத் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வருகை.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைத் தொடர்ந்து இன்று சென்னை வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்பினர் அறிவித்துள்ளனர். மேலும் இன்று காலை 9 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் நேற்று பாரதிராஜா அறிவித்தார். இந்த அறிவிப்பால் சென்னை விமான நிலையம் உட்பட அனைத்து முக்கிய பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்புடன் சுமார் 5 ஆயிரம் போலிசார் குவிப்பு.

பிரதமர் மோடியின் தில்லி – சென்னை பயண விவரம் குறித்து அளிக்கப்பட்ட தகவல்கள்:

– காலை 6.40 மணிக்குத் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படுகிறார்.
– காலை 9.20 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
– 9.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் புறப்படுகிறார்.
– 9.55 மணிக்கு ராணுவ நிகழ்ச்சி இடத்தைச் சென்றடைவார்.
– 10.00 மணிக்கு நிகழ்ச்சியைத் துவங்கி வைத்துப் பங்கேற்கிறார்.
– 11.50 அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள ஹெலிபேடிற்கு செல்கிறார்.
– 12 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 12.35 மணிக்குச் சென்னை ஐஐடி ஹெலிபேட்டிற்கு வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து காரில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிகழ்ச்சிக்குப் புறப்படுகிறார்.
– அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து 1.50 மணிக்குப் புறப்பட்டு, 2.00 மணிக்கு ஐஐசி வளாகம் வருகிறார்.
– 2.05 மணிக்கு ஐஐடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், சென்னை விமான நிலையம் செல்கிறார்.
– 2.20 மணிக்குச் சென்னையில் இருந்து அவரின் தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்படுகிறார் மோடி.

இதுவரை அளிக்கப்பட்ட இந்த விவரங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் இன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மோடி பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் எப்போது போராட்டத்தில் பங்கேற்கிறார் என்ற உறுதி தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அமைதியை விரும்பும் அதே நேரத்தில் நாடு மக்களின் பாதுகாப்பில் கவனமாக இருப்போம்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

2.30 மணி : தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார், பிரதமர் மோடி. அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மற்றும் மத்திய அமைச்சர்கள் வழியணுப்பி வைத்தனர்.

2.15 மணி : அடையாறு புற்று நோய் மையத்தில் இருந்து, ஐஐடி வளாகத்துக்கு காரில் பயணம் செய்தார், பிரதமர் மோடி.

1.40 மணி : அடையாறு புற்று நோய் மையத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஐஐடி வளாகத்தில் உள்ள ஹெலிப்பேடுக்கு சென்ற மோடிக்கு ஐஐடி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். பதாகைகளை தூக்கிக் காட்டினர்.

1.35 மணி : புற்று நோய் மையத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

1.15 மணி : கருப்புக் கொடி போராட்டம் நடத்திய கனிமொழி எம்.பி, வைகோ உள்பட திமுக, மதி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1.00 மணி : சென்னை அடையாறு புற்று நோய் மையத்தின் வைர விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். அவருடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

12.45 மணி : சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகே கருப்புக் கொடி, கருப்பு பலூன் பறக்கவிட்ட வைகோ, திடீரென தடையை மீறி மறியலில் ஈடுபட்டார்.

12.15 மணி : பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு கட்சியினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் விமானம், ஹெலிகாப்டரில் பயணம் செய்து வருகிறார். திமுக சார்பில் ராட்ஷச பலூன் பறக்கவிட்டு வருவதால், கடைசி நேரத்தில் மோடி செல்லும் ஏர் பாதையிலிம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

black baloon 1

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக, மதிமுகவினர் பறக்கவிட்ட பலூன்கள்.

12.10 மணி : புதுவையில் உண்ணாவிரதம் இருந்த பாஜகவினர் மற்றும் தமிழ் அமைப்புகளிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கைகலப்பு, கல்வீச்சு என பரபரப்பாக இருக்கிறது.

12.00 மணி : சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கனிமொழி எம்.பி. தலைமையில் கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடந்த்து. அதில் திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மு.க.தமிழரசு, நடிகர் அருள் நிதியும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


11.40 மணி : திமுக தலைவர் கருணாநிதி தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியது போல, கருப்புச் சட்டை அணிந்து வீட்டில் அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

11.35 மணி : திமுக எம்.எல்.ஏ. மா.சு தலைமையில், அவரது இல்லத்திலிருந்து திமுகவினர் பேரணியாக புறப்பட்டு செல்கிறார்கள்.

11.30 மணி : சைதாப்பேட்டை, வேளச்சேரி சந்திப்பில் மதிமுக தலைவர் வைகோ கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பேரணியில் சேகர்பாபு, வாகை சந்திரசேகர் உள்பட பல எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டுள்ளனர். கருப்பு பலூனையும் பறக்கவிட்டார், வைகோ.

11.15 மணி : பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சைதாப்பேட்டையில் தென் சென்னை தெற்கு மாவட்ட திமுகவினர் பிரமாண்டமான கருப்பு பலூனை பறக்கவிட்டுள்ளனர். அதில் ’கோ பேக் மோடி’ என்று எழுதப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் வீட்டிலும் ராட்ஷச கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. ஆறு இடங்களில் திமுக 12 மணி முதல் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளவு அருகே நடக்கும் போராட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார். மா.சு. வீட்டில் ஏற்றப்பட்டுள்ள கருப்பு பலூனை இறக்க வேண்டும் என போலீசார் சொல்லி வருகின்றனர். அதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும் போலீசார் சொல்லி வருகின்றனர்.

10.50 மணி : பிரதமர் நரேந்திர மோடி பேச்சை தொடங்கினார். காலை வணக்கம் என தமிழில் சொல்லி பேச்சை தொடங்கினார், மோடி. உலகுக்கு அகிம்சைய போதித்த நாடு இந்தியா. வேத காலத்தில் இருந்து அகிம்சையும் அன்பையும் போதித்து வருகிறோம். ஆனாலும் ராணுவ தளவாடங்களின் அவசியத்தை உணர்ந்து இருக்கிறோம். ராணுவத்துக்கு தளவாட கொள்முதலை உள்நாட்டிலேயே செய்வோம். ராணுவ தளவாட உற்பத்திக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். முழு பேச்சையும் படிக்க…
10.35 மணி : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் பேசி வருகிறார். சர்வதேச கண்காட்சியை சென்னையில் நடத்த அனுமதியளத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்திய ராணுவ தளவாட உற்பத்தியில் 20 சதவிகிதம் பங்கெடுக்க தமிழகம் தயாராக இருக்கிறது.

10.30 மணி : மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். ராணுவ தளவாட உற்பத்தியை மேன் இந்தியா திட்டத்தில் இணைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார், அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

10.25 மணி : தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விழாவில் பேசி வருகிறார். முதல் ராணுவ கண்காட்சியில் பிரதமர் கலந்து கொண்டதற்காக அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

10.15 : திருவிடந்தையில் ராணுவ தள்வாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

10.10 மணி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைதாகி திருச்சி சிறையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10.05 மணி : திருவிடந்தையில் நடைபெற உள்ள ராணுவ கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்தார், பிரதமர் மோடி.

10 மணி : சென்னை அடுத்த மாமல்லபுரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து சென்று சேர்ந்தார், பிரதமர் மோடி. அங்கிருந்து காரில், ராணுவ கண்காட்சிக்கு செல்கிறார்.

9.50 மணி : விமான நிலையம் எதிரில் விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.

9.35 மணி : பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி உள்பட அமைச்சர்கள் வரவேற்றனர்.

9.30 மணி : கருப்புச் சட்டை அணிந்து, வைத்தீஸ்வரன் கோயிலில் ஊர்வலமாக காவிரி மீட்பு பயணத்தில் கலந்து கொண்டார், மு.க.ஸ்டாலின்.

stalin - black shirt

கருப்புச் சட்டை அணிந்து நடைபயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின்.

9.25 மணி : ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர்.

9.20 மணி : இயக்குநர்கள் பாரதி ராஜா, அமீர் உள்பட திரைப்படத்துறையினர் விமான நிலைய நுழைவாயில் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

9.10 மணி : ஈரோடு மாவட்டம் சித்தோட்டைச் சேர்ந்த வாலிபர் சிவலிங்கம், பிரதமர் வருகைக்கு எதிப்பு தெரிவித்து தீக்குளித்தார்.

9.00 மணி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் விமான நிலையம் முற்றுகையிட முயற்சி. விளம்பர பலகைகள் மீது ஏறி நின்று கருப்புக் கொடியுடன் போராட்டம்.இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறும் போது, ‘எங்கள் கட்சியினர் அனைவரும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் போராட்டத்தில் இருக்கிறோம். விளம்பர பலகையில் ஏறி நிற்கும் இளைஞர்கள் உடனே கீழே இறங்கி வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

8.55 மணி: பிரதமரை வரவேற்கச் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

8.55 மணி: சென்னை ஆலந்தூரில் கருப்புக்கொடி போராட்டம். தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி மற்றும் கருப்பு பலூன் பறக்கச் செய்து போராட்டம்.

karunanidhi house

திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

8.30 மணி: மோடியின் வருகையை எதிர்த்து சென்னை அண்ணா அறிவாலயம், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லம் மற்றும் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இல்லத்தின் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு, திமுக எம்பி கனிமொழியின் வீடு ஆகிய இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

7.30 மணி: பிரதமர் அடையாறு மருத்துவமனைச் செல்லும் நிகழ்வையொட்டி காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பொதுமக்கள் செல்லும் போக்குவரத்து பாதைகள் மாற்றப்பட்டுள்ளது.

காலை 6.40 மணி: பிரதமர் மோடி தனி விமானம் மூலம் தில்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close