New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/08/Blue-whales-Madurai.jpg)
புளூ வேல் விளையாடிய மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியை அருகேயுள்ள மொட்டமலையை சேர்ந்தவர் ஜெயமணி. இவர் பேக்கரியில் வேலை செய்து வருகிறார். அவரின் இரண்டாவது மகன் விக்னேஷ்(19) அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண்ட்ராய்டு மொபைல் ஒன்றை, விக்னேஷ்க்கு வாங்கி கொடுத்துள்ளனர் அவரது பெற்றோர்.
இந்தநிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு காரணம் “ப்ளூ வேல் ” விளையாட்டு தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விக்னேஷ் தனது வலது கையில் திமிங்கலத்தின் உருவத்தை வரைந்திருந்ததும், அவரது நோட்டுப்புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படங்கள் இருந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர். மேலும், “நீலத்திமிங்கலம் விளையாட்டல்ல. விபரீதம். உள்ளே சென்றால், வெளியே வர முடியாது” என்றும் விக்னேஷ் எழுதி வைத்திருந்தார்.
இணையதளம் வாயிலாக ப்ளூ வேல் விளையாட்டை விளையாடி, அதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் விக்னேஷ் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கும் நிலையில், ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது என்பது இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது. ப்ளூ வேல் விளையாட்டை விளையாடுபவர்கள் அதற்கு அடிமையாகி, பல்வேறு விபரீத சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.