சட்டம்-ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்கிய குண்டு வீச்சு : போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் , சட்டம்-ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. சம்பவ இடத்தை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்...

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் , சட்டம்-ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. சம்பவ இடத்தை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மாநகரின் பிரதானமான ஒரு பகுதி தேனாம்பேட்டை! தி.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளின் தலைமை அலுவலகங்கள், காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான வணிக வளாகம் மற்றும் காமராஜர் அரங்கம் ஆகியன இங்கு அமைந்துள்ளன. 24 மணி நேரமும் போக்குவரத்து குறையாத ஏரியா இது!
இங்கு பிரதானமான அண்ணா சாலையில் காமராஜர் அரங்கத்தை அடுத்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த போலீஸ் நிலைய பாதுகாப்பில்தான் இங்குள்ள மேற்படி கட்சி அலுவலகங்கள், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அலுவலகங்கள், மாநில அரசின் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் (டி.எம்.எஸ்) உள்ளிட்டவை இயங்குகின்றன.
ஆனால் ஜூலை 12-ம் தேதி இரவில் மர்ம நபர்கள் இந்த போலீஸ் நிலையம் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசியிருப்பது திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குண்டுவீச்சில் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சில இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. போலீஸ் சுதாரித்து வருவதற்குள் குண்டு வீசிய நபர்கள் தப்பிவிட்டனர்.
இன்று (ஜூலை 13) சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மேற்படி குண்டு வீச்சு குறித்து விசாரித்தார். அதே ஏரியாவில் வசிக்கும் குடிசைவாசிகள் இடையிலான மோதலில் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் போலீஸ் மீதான கோபத்தில் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமராவில், குண்டு வீசியவர்களின் படங்கள் பதிவாகவில்லை என்கிறார்கள். காரணம், மேற்படி கேமராக்கள் மேல் நோக்கி திருப்பி வைக்கப்பட்டிருந்ததுதானாம். அதுவும் எதேச்சையாக நடந்ததா? அல்லது, போலீஸ் நிலையத்தில் நடக்கும் சங்கதிகள் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காக திட்டமிட்டு போலீஸாரே திருப்பி வைத்தார்களா? என விசாரணை நடக்கிறது.
இந்த போலீஸ் நிலையத்தை ஒட்டியுள்ள காமராஜர் அரங்கில்தான் ஜூலை 13-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரின் பொதுவாழ்வு பொன்விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாலையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அதில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசவிருந்த சூழலில் இந்த குண்டு வீச்சு நடந்திருக்கிறது. தவிர, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் சூழலில் சட்டம் ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்ததால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் படை முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

×Close
×Close