தமிழ்நாட்டில் 40,000 க்கும் மேற்பட்ட பிராமண இளைஞர்கள் தமிழகத்தில் பிராமண சமூகத்தில் மணப்பெண்கள் கிடைக்காததால், தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் உத்தரப் பிரதேசம், பீகாரில் உள்ள பிராமணர்கள் சமூகத்தில் பொருத்தமான வரனைத் தேடும் ஒரு சிறப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைவர் என்.நாராயணன், ‘பிராமணர் சங்கம்’ நவம்பர் இதழில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “எங்கள் சங்கத்தின் சார்பாக நாங்கள் ஒரு சிறப்பு இயக்கத்தைத் தொடங்கினோம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 30-40 வயதுக்குட்பட்ட 40,000க்கும் மேற்பட்ட தமிழ் பிராமண இளைஞர்கள் தமிழகத்தில் மணப்பெண்களைக் கண்டுபிடிக்க முடியாததால், திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. “தமிழகத்தில் பிராமணர்களில் திருமண வயதில் 10 ஆண்கள் இருந்தால், 6 பெண்கள் மட்டுமே உள்ளனர்” என்று பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் தெரிவித்துள்ளார்.
பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் தனது கடிதத்தில், “இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்ல டெல்லி, லக்னோ மற்றும் பாட்னாவில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஹிந்தியில் எழுத படிக்க, பேசத் தெரிந்த ஒருவர், ஒருங்கிணைப்புப் பணிக்காக, அந்த நகரங்களில் உள்ள பிராமணர் சங்கத்தின் தலைமையகத்தில் நியமிக்கப்படுவார்கள். லக்னோ மற்றும் பாட்னாவில் உள்ள மக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த முயற்சி நடைமுறை சாத்தியம் உள்ளது” என்றும் கூறியுள்ளார்.
தமிழக பிராமணர் ஆண்களுக்கு வட மாநிலங்களில் பிரமாண சமூகத்தில் மணப்பெண்களத் தேடுவதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ள பிராமணர் சங்கத்தின் நடவடிக்கையை பலர் வரவேற்றாலும், பலர் குழப்பமடைந்துள்ளனர். கல்வியாளர் எம்.பரமேஸ்வரன் கூறுகையில் ஊடகங்களிடம் கூறுகையில், “திருமண வயதில் தமிழ் பிராமணப் பெண்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்றாலும், ஆண்களுக்கு மணமகள் கிடைக்காததற்கு இது ஒன்றே காரணம் அல்ல. ஆண்களின் பெற்றோர்கள் ஏன் திருமணத்தை ஆடம்பரமான திருமண மண்டபங்களில் நடத்த விரும்புகிறார்கள்? அவர்கள் திருமணத்தை எளிமையான முறையில் நடத்துவதற்கு எது தடையாக இருக்கிறது? ஏன் கோயிலிலோ அல்லது வீட்டிலோ செய்யக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமணத்தை நடத்துவதற்கான முழுச் செலவையும் பெண்ணின் குடும்பத்தினர் ஏற்க வேண்டும். இது பெரும்பாலான சமூகங்களின் சாபக்கேடு என்றும் பரமேஸ்வரன் கூறினார். “ஆடம்பரமான திருமணங்கள் அந்தஸ்தின் அடையாளமாகிவிட்டன, ஆனால், அது துரதிர்ஷ்டவசமானவை. ஒரு சமூகம் முன்னேற்றத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பிற்போக்குத்தனத்தை நிராகரிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.
மணப்பெண் தேடும் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், “கன்னடம் பேசும் மாத்வாக்களுக்கும் தமிழ் பேசும் ஸ்மார்த்தர்களுக்கும் இடையே தமிழ்-தெலுங்கு பிராமணத் திருமணங்கள் என்பது இப்போது அரிதாக நடக்கிறது. பல பத்தாண்டுகளுக்கு முன்பு இது போன்ற திருமணங்கள் கற்பனை செய்ய முடியாத ஒன்று” என்று கூறினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் வைணவ பிராமணர் ஒருவர் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு ஐயங்கார் சமூகத்தில் தென்கலை, வடகலை பிரிவினருக்கு இடையேகூட திருமணங்கள் நடக்காமல் இருந்தது. இன்று திருமணம் நடக்கிறது… பிராமணர் சங்கத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.
தமிழகத்தில் பிராமண சமூகத்தில் எப்படி பிரமாணர் ஆண்கள் திருமணம் செய்துகொள்வதற்கு பிராமண மணமகள் கிடைக்காத சூழ்நிலை உருவானது? மாநிலம் கடந்து வட மாநிலங்களில் பிராமண சமூகத்திலேயே மணப்பெண் பார்ப்பது தமிழக பிராமண சமூகத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நடிகர் எஸ்.வி.சேகரிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து பேசினார்.
நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது: “திருமணத்துக்கு மணப்பெண்கள் கிடைப்பது இல்லை என்பது பிராமணர் சமூகத்தில் மட்டுமல்ல, எல்லா சமூகங்களிலும் இந்த சூழ்நிலை நிலவுகிறது. முன்பெல்லாம் அப்பா, அம்மா சொல்கிற பையனை பெண்கள் திருமணம் செய்துகொள்வார்கள். அதெல்லாம் இப்போது மாறிப்போச்சு. சமூகத்தின் வெளித் தோற்றம் மாறியுள்ளது. கல்வியின் மூலம் அனைவரும் வேலை செல்கிறார்கள். நம்முடைய மதத்தின் விழுமியங்கள், நம்முடைய குடும்பத்தின் விழுமியங்கள் எல்லாம் இரண்டாம் கட்டத்துக்கு போய்விட்டன. பணம் முதலிடம் பெற்றுவிட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கிறது. அதனால், நம்ம பண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது எல்லோரும் செய்ய வேண்டும்.
பிராமண சமூகத்தில் பையணோ, பெண்ணோ தங்களுக்கு விருப்பமானவர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்கள் வீடுகளில், வேண்டாம், வீட்டை விட்டுப் போ என்றெல்லாம் சொல்வதில்லை. பிள்ளைகளின் சந்தோஷத்துக்காக ஒப்புக்கொள்கிறார்கள். இதுதான் யதார்த்தம். இது பற்றி பிரமாணர்கள் சங்கத் தலைவர்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.
கல்வியை எல்லா பள்ளிகளும் கொடுக்கும். நம்ம கலாச்சாரம், பாரம்பரியம், கோட்பாடு பற்றியும் முன்னோர்கள் பற்றியும் நாமதான் குழந்தைகளிடம் சொல்லி கொடுக்கவேண்டும். சில நேரங்களில் அதெல்லாம் ‘மிஸ்’ ஆகும்போது இதெல்லாம் வருகிறது.” என்று கூறினார்.
“உதாரணத்துக்கு நாங்கள் ஐயர், ஆனால், என்னுடைய மருமகன் ஐயங்கார், அவர்கள் பிராமணர்கள்தானே. நான் பெருந்தன்மையா ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லும்போது அவர்களும் பெருந்தன்மையா ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லும்போதுதானே உறவுமுறை பலமாக இருக்கும். இதில் நான் மாட்டுமே என்று சொல்ல முடியாது.” என்று கூறினார்.
தமிழக பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வட மாநிலங்களில் உள்ள பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த மணமகள்களை பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செய்வது என்பது பிராமணர் சமூகத்தில் உள்ள உட்சாதிகள் மறைய வாய்ப்பு உள்ளது இல்லையா? என்ற கேள்வி பதிலளித்த எஸ்.வி.சேகர், “கொஞ்சம் கொஞ்சமாக மாறும்போது பிராமணர்களில் 30 குழுக்கள் இருக்கிறது என்றால் அது 10 குழுக்களாகும்போது அது மேலும் வலிமையாவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாறும். மாற வேண்டும்.
எல்லோருக்கும் தனிப்பட்ட எதிர்பார்புகள் இருக்கிறது. சில நேரங்களில் பெற்றோர்களுடன்கூட பொருந்திப் போவதில்லை. அந்த காலத்தில் அப்படி என்று யார் பேசினாலும் அவர்கள் தலைமுறை இடைவெளிக்குள் வந்துவிடுகிறார்கள். குழந்தைகளை நாம் வளர்த்தாலும் அவர்கள் பெரும்பாலும் வெளியேதான் அதிக நேரம் இருக்கிறார்கள். அந்த சூழல் வட்டங்களை நாம் வழிகாட்டும்போது சரியாக இருக்கும். அதையெல்லாம் தாண்டி, ஒவ்வொருவருடைய ஜாதகத்தைப் பொருத்து நடக்கிறது.” என்று கூறினார்.
பிராமணர்கள் வட மாநிலங்களில் மணமகளைத் தேடும்போது, மொழி ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், “மொழி பிரச்னை இப்போது ரொம்ப குறைந்துவிட்டது. ஏன் குறைந்தது என்றால், இந்தி படிக்கக் கூடாது என்பதால் தானே நாம பெண்ணை தமிழ்நாட்டிலே தேடுகிறோம். பிராமணர்களில் பெரும்பாலும் எல்லோரும் இந்தி படிக்கிறார்கள், பிரெஞ்சு படிக்கிறார்கள், மற்ற மொழிகளை எல்லாம் படிக்கிறார்கள். அதனால், மொழி ஒரு பெரிய தடையாக வராது.
தஞ்சாவூரில் இருக்கிற பிராமணர்கள் திருநெல்வேலியில் இருக்கிற பிராமணர்கள் சம்பந்தம் செய்யலாம் என்கிறபோது அவர்களுடய பழக்க வழக்கம் வேறாக இருக்கும் நம்முடைய பழக்க வழக்கம் வேறாக இருக்கும் வேண்டாம் என்று சொல்வார்கள். இப்போது அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது.
கிராம் என்பதே போய்விட்டது. எல்லோரும் சிட்டிக்கு வந்தாச்சு. நமக்கு ஒரு தாராளமான சிந்தனை தேவை. அரசியல் களத்தில்தான் பிராமணர்களை தப்பா சொல்கிறார்களே தவிர, பிராமணர்களில் எங்கேயும் ஆணவக் கொலை நடப்பது கிடையாது.” என்று கூறினார்.
தமிழக பிராமணர் இளைஞர்கள் வட மாநிலங்களில் உள்ள பிராமணர் சமூகத்திலேயே திருமணம் செய்துகொள்வதன் மூலம் அது தமிழக பிராமணர் சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றதற்கு, “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பிராமணர்கள் மீது வன்மம் கொள்கிற ஒரு மன நிலையை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு 10 சதவீதம் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடும் ரு காரணம். அதைக்கூட தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இந்த மேட்ரிமோனிகள் உலகத்தையே இணைத்துள்ளது. ஏற்கெனவே இங்கே ஆல் இந்தியா பிராமண சங்கம் இருக்கிறது. உலக பிராமண சங்கம் அமைப்பு வந்துவிட்டது. எல்லோரும் ஒன்று சேர்கிறார்கள். அதையும் தாண்டி விதிவிலக்குகள் இருக்கும். அது எல்லா மதத்திலும் சமூகத்திலும் இருக்கும்.
எல்லாவற்றையும் தாண்டி, 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சினிமாவில் கல்யாணத்தை நிறுத்துங்க, மாப்பிள்ளை லஞ்சம் வாங்கிறாராமில்ல என்று வசனம் வரும். ஆனால், இப்போது, கல்யாணத்தை நிறுத்துங்க மாப்பிள்ளைக்கும் மேல்வரும்படியே கிடையாதாமே என்று வசனம் வருகிறது.
இதற்கு முன்பு என்னவெல்லாம் எதெல்லாம் அறமில்லாததாக இருந்ததோ அதெல்லாம் இப்போது அறம் ஆகிவிட்டது. அதனால், இன்று அறமில்லாதவைகள் நாளை அறமாகலாம். அந்த மாதிரி போனதுக்கு மனித வாழ்க்கையின் விழுமியங்கள் பின்னால் போய், பணம்தான் முதன்மையானது என்று வரும்போது இதெல்லாம் மாறுகிறது. அதனால், அகில இத்திய அளவில் இது போல ஒருங்கிணைப்பது நல்லதுதான். இதில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று எதுவும் இல்லை. ஆனால், அந்தந்த சமூகங்களுக்கு உரிய பண்பு விட்டுப்போய்விடக்கூடாது என்பதுதான்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.