சட்டமன்றத்தில் குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாக கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எல்.எல்.ஏ-க்கள் 21 பேருக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் அண்மையில் செய்தி வெளி வந்தது. அதில், தங்கு தடையின்றி குட்கா விற்பனைக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச விவரங்கள் குறித்து வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும், அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தியை சுட்டிக் காட்டிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், அந்தப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி, கமிஷனர் உள்ளிட்டோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எழுப்பிய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக திமுக எம்எல்ஏ-க்கள் சிலர் திடீரென குட்கா பொட்டலங்களை அவையில் எடுத்துக் காட்டினர். திமுக உறுப்பினர்களின் இந்தச் செயலைக் கண்டித்த சபாநாயகர் தனபால், திமுக எம்எல்ஏ-க்கள் 20 பேருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக்குழுவுக்கு பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை உரிமைக்குழு கூடியது. உரிமைக் குழு தலைவரான துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் 7 உறுப்பினர்களும், திமுக தரப்பில் 5 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-கள் 3 பேர் மற்றும் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் மீதமுள்ள 4 உறுப்பினர்கள் ஆவர். உரிமைக் குழுவின் தான் உறுப்பினராக இருந்தபோதிலும், தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை 5 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில், திமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு கூட்டப்பட்டு தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் விளக்கம் தொடர்பாக பரிசீலனை செய்யப்படும். பின்னர், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை சட்டமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்பார்.