பஸ் கட்டணம் தமிழகத்தில் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த அதிரடி நடவடிக்கை கடும் எதிர்ப்பை சம்பாதிக்கிறது.
பஸ் கட்டணம் தமிழ்நாட்டில் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று (ஜனவரி 19) இரவு 7.30 மணியளவில் தமிழக அரசு அறிவித்தது. கட்டண உயர்வு நாளை (20-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
பஸ் கட்டண உயர்வு LIVE UPDATES
இரவு 8.15 : ‘அப்பாவி மக்கள் தலையில் கடுமையான சுமையை தமிழக அரசு ஏற்றியிருக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.
இரவு 8.10 : இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கருத்து கூறினர்.
இரவு 8.05 : போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் இது குறித்து கூறுகையில், ‘போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கும், பஸ் கட்டண உயர்வுக்கும் தொடர்பு கிடையாது. நாங்கள் மற்ற துறைகளில் டிரைவர்களின் சம்பளத்தை சுட்டிக்காட்டி ஒப்பந்தம் செய்யக் கேட்டோம். அதனால் ஏற்படும் இழப்பை அரசுதான் சரி செய்ய வேண்டுமே தவிர, மக்கள் தலையில் சுமத்தக் கூடாது. இது கையாலாகாத அரசு என்பது இதன் மூலமாக நிரூபணம் ஆகிறது.’ என்றார்.
பஸ் கட்டண உயர்வு : அண்டை மாநிலங்களுடன் ஒப்பீடு
இரவு 7.50 : கடந்த 6 ஆண்டுகளில் டீசல் விலை 50 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் தமிழக அரசு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறது.
பஸ் கட்டண உயர்வு : அரசு வெளியிட்ட பட்டியல்
இரவு 7.45 : மற்ற மாநிலங்களை விட தற்போதும் பஸ் கட்டணம் தமிழகத்தில் குறைவாகவே இருப்பதாகவும், வேறு வழியில்லாத சூழலில் இந்த கட்டண உயர்வு அமுல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தனது அறிவிப்பில் கூறியிருக்கிறது.
இரவு 7.30 : புறநகர் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ5-ல் இருந்து 6-ஆக உயர்த்தப் பட்டிருக்கிறது. புறநகர் விரைவுப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ24 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதி நவீன சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ33 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இரவு 7.30 : தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரபூர்வமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. நகர், மாநகர் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ3-ல் இருந்து ரூ5 ஆகிறது. நகர், மாநகர் குளிர் சாதன பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ25 என நிர்ணயிக்கப்படுகிறது.