பஸ் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் தீர்வு எட்டப்படலாம்.
பொது மக்களுக்கு சிரமமே: 6வது நாளாக நடைபெற்று வரும் #TransportStrike ஏன் என்பதை #CITU வின் மாநிலத் தலைவரும் #CPIM CCM தோழர் அ.சவுந்திரராசன் ஆதாரங்களுடன் விளக்குகிறார். #TNBusStrike #BusStrike #BusStrikeTN #Transportworkers #CITU #TNSTCWorkers @ https://t.co/DeSLKqRMue pic.twitter.com/V4Bq43Klwy
— CPIM Tamilnadu (@tncpim) January 10, 2018
பஸ் ஸ்டிரைக், கடந்த 4-ம் தேதி முதல் தமிழகத்தை உலுக்கி வருகிறது. ஜனவரி 4-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தை முடிவில் 2.44 மடங்கு காரணி அடிப்படையில் ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் திமுக, இடதுசாரிகள் தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. 2.57 மடங்கு காரணை அடிப்படையிலான ஊதிய உயர்வை அவர்கள் வலியுறுத்தினர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பதும் இன்னொரு கோரிக்கை. இதில் இரண்டாவது கோரிக்கையின் ஒரு பகுதியை நிறைவேற்றும் விதமாக போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை 750 கோடி ரூபாயை பொங்கல் பண்டிகைக்குள் வழங்குவதாக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 மடங்கு காரணி ஊதிய உயர்வு என்பது இதுவரை வரலாற்றில் இதற்கு முன்பு வழங்கப்படாத அளவிலான ஊதிய உயர்வு என்பதை அரசுத் தரப்பு ஒரு வாதமாக வைத்து வருகிறது. இந்தச் சூழலில் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 11) வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘பொதுமக்களின் அவதி, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளை ஆகியவற்றை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு வர வேண்டும்’ என நீதிபதிகள் கோரிக்கை வைத்தனர். இரவு யோசித்து இன்று(11-ம் தேதி) பதில் சொல்லவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் கடந்த 4-ம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதையே பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர். எனவே இன்று இதில் ஒரு முடிவு எட்டப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வந்தால் பொங்கல் பண்டிகையையொட்டி ஊருக்கும் திரும்பும் பயணிகள், வணிகர்கள் கொஞ்சமாவது நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.