பஸ் ஸ்டிரைக் தொடர்பாக அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு நோட்டீஸ் போக்குவரத்துக் கழகம் நோட்டீஸ் அனுப்பியது.
பஸ் ஸ்டிரைக், ஜனவரி 4-ம் தேதி முதல் தமிழ்நாட்டை ஸ்தம்பிக்க வைத்தது. 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்காமல் திமுக., இடதுசாரி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 13 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் குதித்தன. இதனால் அன்றாடம் பஸ் போக்குவரத்தை நம்பி வணிகம் செய்பவர்கள், வேலைகளுக்கு செல்பவர்கள் என பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர, இந்தியன் மக்கள் மன்றத்தை சேர்ந்த வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு, ‘போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும். அப்படி பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்’ என கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டனர்.
பஸ் ஸ்டிரைக் தொடர்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 8-ம் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்வதாக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் திங்கட்கிழமை இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, பரபரப்பு திருப்பங்கள் உருவாகும் என தெரிகிறது.
இதற்கிடையே பணிக்கு வராத ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியை ஜனவரி 6-ம் தேதியே போக்குவரத்துக் கழகங்கள் தொடங்கிவிட்டன. அது தொடர்பான புள்ளி விவரங்களை அரசுத் தரப்பில் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். தொழிற்சங்கங்கள் சார்பிலும் தங்கள் கருத்துகளை முன்வைத்து நீதிமன்றத்தில் வாதிட இருக்கிறார்கள்.
4-வது நாளாக இன்றும் (7-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக் தொடர்கிறது. இது தொடர்பான LIVE UPDATES
பகல் 1.00 : போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக தன்னை போனில் தொடர்புகொண்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், அப்போது பேசியது தொடர்பாக ஒருதலைப்பட்சமான தகவல்களை மட்டுமே மீடியாவில் தெரிவித்திருப்பதாக அறிக்கை விட்டார். போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் வைத்தார்.
12.00 : விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுனர் எடுத்துச் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது. இதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
பகல் 11.00 : திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையை பேசி தீர்க்க வேண்டுகோள் உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காலை 10.00 : போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான கரூரில் முழு அளவில் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் பஸ்களை இயக்கும் முயற்சியில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அசைன்மென்ட் இது!
காலை 9.45 : அரசுத் தரப்பு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து இன்று கூடுதல் ஊழியர்கள் பணிக்கு திரும்பியதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பல இடங்களில் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போட்டு அரசு தரப்பு மிரட்டுவதாக தொ.மு.ச. தலைவர் சண்முகம் கூறினார்
காலை 9.30 : முந்தைய 3 தினங்களைவிட இன்று தமிழ்நாடு முழுவதும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் 40 சதவிகிதம் வரை பஸ்கள் இயக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் துணையுடன் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன.