இந்து சமூகம் சார்ந்த ஆன்மீகவாதி ஒருவருக்கு சங் பரிவார்களால் மிரட்டல் என்கிற புகார் தமிழக டி.ஜி.பி.யிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
மிரட்டலுக்கு உள்ளானவர், பால பிரஜாதிபதி அடிகளார். தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் அய்யா (வைகுண்டர்) வழி சமூக மக்களின் குருவாக கருதப்படுகிறவர்! பிப்ரவரி 27-ம் தேதி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிற அமைப்பு சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு முழங்கினார் இவர்.
அந்த மாநாட்டில் பேசிய அடிகளார், ‘இந்துக்கள் கண்டிப்பாக மனு தர்மம் படிக்க வேண்டும். அதைப் படித்தால், கைபர் போலன் கணவாய் வழியாக வந்த 3 சதவிகிதம் பேரை மீண்டும் இந்துக்களே துரத்தி விடுவார்கள்’ என சாடினார். இது அவருக்கு எதிர்வினைகளையும் உருவாக்கியது.
இந்த மாநாடுக்கு முன்பும், பின்பும் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அமைந்துள்ள அடிகளாரின் இல்லத்தை சிலர் தாக்கவிருப்பதாக வதந்திகள் கிளம்பின. சமூக வலைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் அவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ‘இந்து சமய பிரிவு ஒன்றைச் சேர்ந்த மடாதிபதி ஒருவரே சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசுவதா? என்கிற ஆத்திரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக’ தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகளான பேராசிரியர் அருணன், உதயகுமார் மற்றும் பேராசிரியர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா உள்ளிட்டோர் மார்ச் 4-ம் தேதி டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்தனர்.
உண்மையில் பால பிரஜாதிபதி அடிகளாருக்கு என்ன பிரச்னை? அவரை நோக்கிய மிரட்டல் அஸ்திரத்தின் பின்னணி என்ன?
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்காக பால பிரஜாதிபதி அடிகளார் பேசியதில் இருந்து...
“எனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களின் பின்னணி, கன்னியாகுமரி தொகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர்தான். தேர்தலில் அவர் தோத்துப் போனார். அதற்கு நான் காரணம் என அவர் நினைக்கிறார். எனவே சிலரை எனக்கு எதிராக தூண்டி விட்டு, வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்துகிறார். அப்படி தாக்குகிறவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காத அளவுக்கு பாதுகாக்கிறார்.
என்னைப் பழிவாங்க, ‘உன் கோயிலை அறநிலையத்துறை மூலமாக கையகப்படுத்துகிறேன்’ என முயற்சிகளை எடுக்கிறார். சுவாமித் தோப்பைப் பொறுத்தவரை, அந்த இடம் எங்க மூதாதையரின் சமாது(தி). அது தொடர்பான வழக்கு கோர்ட்டுல இருக்கு. இது தொடர்பாக நான் முதல்வர், துணை முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் என பலரையும் சந்தித்திருக்கிறேன்.
அம்மா (ஜெயலலிதா) எங்கள் சுவாமிதோப்பு பதிக்கு வந்த காலத்தில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் என்னை நன்கு அறிவார்கள். நான் அவர்களை சந்தித்தபோது என்னிடம் ஆசி பெற்று, ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது சாமி’ என்றார்கள். ஆனால் இவர் மட்டும் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறார்.’ என்ற அடிகளாரிடம் சில கேள்விகளை வைத்தோம்.”
அப்போ உங்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் இல்லையா?
“மிரட்டல் விடுத்தவர் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்புகளில் உள்ளவர்தான். தாணுலிங்க நாடார் பிறந்த நாள் விழா மேடையில் பகிரங்கமாக அவர் எனக்கு அவர் மிரட்டல் விடுக்கிறார். அதே நபரை இந்த அதிமுக பிரமுகர், நாங்குனேரி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்துச் சென்று, ‘இவர்தான் அய்யா வைகுண்டரின் வாரிசு’ என்கிற அளவில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அவரை பயன்படுத்தி எனக்கு மிரட்டல் வேலைகளை செய்கிறார்.’
தேர்தல் தோல்விக்காக அதிமுக பிரமுகர் 4 ஆண்டுகளைக் கடந்தும் உங்களுக்கு தொல்லை தருவதாக கூறுவது நெருடுகிறதே?
“அம்மா இருந்த காலத்தில் அம்மா எங்களுடன் நெருக்கமாக இருந்ததை அவர் விரும்பவில்லை. அப்போதே அவருக்கு என் மீது விரோதம் வந்துவிட்டது. எங்கள் பதியை அறநிலையத்துறை கையகப்படுத்த முடியாத அளவுக்கு தனி ஆணை போட்டுத் தருகிறேன் என அம்மா சொன்னார். அதை இப்போது இந்த அரசு செய்துவிடக் கூடாது என இவர் வேலை செய்கிறார். இது போன்ற வேலைகளை செய்வதில் அவர் திறமைசாலி என்பதும் எங்களுக்குத் தெரியும்.”
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் டிஜிபி-யிடம் கொடுத்த புகாரில், சிஏஏ, என்.பி.ஆர்.ருக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பதால் மிரட்டப்படுவதாக கூறியிருக்கிறார்களே?
“அவர்கள் கோணத்தில் சொல்கிறார்கள். அதுவும் நிஜம்தான். ‘ஒரு இந்துச் சாமியார் எப்படி சிஏஏ-வுக்கு எதிராக பேசலாம் என மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் தாக்குகிறார்கள். சென்னை மாநாட்டுக்கு நான் கிளம்பி வந்துவிடக் கூடாது என்பதற்காக எனது வீட்டைத் தாக்கப் போவதாக ஒரு தகவல் பரப்பினார்கள். போலீஸாரே இது பற்றி என்னிடம் வந்து கேட்டார்கள். போலீஸுக்கு தெரியாமல் யார் அப்படி செய்ய முடியும்? எனவே போலீஸை கட்டிப் போடுவது, அந்த அதிமுக பிரமுகர்தான்.”
ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதும் டிஜிபி-யிடம் புகார் கூறப்பட்டதே? இந்த மிரட்டல்களில் அவர்கள் பங்கு இருக்கிறதா?
“இல்லை. அது வேறு விவகாரமாக இருக்கும். என்னைப் பற்றி அவர்கள் பேசவில்லை. பொன்.ராதாகிருஷ்ணனின் வெற்றியோ, தோல்வியோ அதில் என் பங்கு இருந்திருக்கும் இல்லையா? இது முழுக்க மேற்படி அதிமுக பிரமுகரின் தூண்டுதல்தான்”.
நேரடியாக உங்களை யாரும் மிரட்டினார்களா?
“சென்னை சிஏஏ எதிர்ப்பு மாநாட்டுக்கு கிளம்பும் முன்பும் எனது வீடு தாக்கப்பட இருப்பதாக போலீஸார் வந்து விசாரிக்கிறார்கள். சென்னை வந்தபிறகும் எனது வீடு தாக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. எனது வீட்டில் இருந்தவர்கள் பீதிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது நேரடி மிரட்டல்தானே?”
இது தொடர்பாக எத்தனை பேர் மீது நீங்கள் புகார் கொடுத்திருக்கிறீர்கள்?
“நான் புகார் கொடுக்கவில்லை. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர்தான் டிஜிபி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கிறது? எனப் பார்ப்போம்.”
ஒரு ஆன்மீகவாதியான நீங்களும் சென்னை மாநாட்டில், ‘3 சதவிகித மக்களை துரத்துவோம்’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறீர்களே?
“மனு தர்மத்தில் அவ்வளவு இருக்கிறது. நீங்களும் அதைப் படித்துப் பாருங்கள். நாங்கள் அதனால் அவ்வளவு துயரப்பட்டிருக்கிறோம். பெண்கள் மேலாடை அணியக்கூடாது, கோவில் வளாகத்திற்குள் நாங்கள் செல்லக்கூடாது, அவர்களின் தெருக்களில்கூட நுழையக்கூடாது... இப்படி எத்தனையோ!
இந்தத் துயரங்களின் வெளிப்பாடே எனது பேச்சு. மற்றபடி யாருக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டுகிறவன் அல்ல நான். ஒருவேளை நான் பேசிய வார்த்தைகளில் யாருக்கும் சங்கடம் இருந்தால், அதை திருத்திக் கொள்வதிலும் எனக்குப் பிரச்னை இல்லை.” என்றார், பால பிரஜாதிபதி அடிகளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.