Advertisment

'3000 டாலருக்கு விற்கப்பட்டோம்': கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்கள் கண்ணீர் பேட்டி!

நீதி ராஜன் மற்றும் அசோக் மணிக்குமார் ராமநாதபுர மாவட்ட எஸ்பி அலுலகத்தில் ஏடிஎஸ்பி அருணிடம் கடந்த வாரத்தில் புகார் அளித்தனர்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cambodia rescued two youths interview in tamil

Cambodia - Indian embassy Tamil Nadu - Neethirajan (L) - Ashok (R)

Cambodia - Indian embassy illegal activities - Tamil Nadu Tamil News: இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். அவ்வகையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள பிரபுக்களூரைச் சேர்ந்த நாகராஜ் மகன் நீதிராஜன் (28 - டிப்ளமோ மெக்கானிக்கல்) மற்றும் உலையூரைச் சேர்ந்த மருதராஜ் மகன் அசோக் மணிக்குமார் (28 பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரி) ஆகிய இரண்டு இளைஞர்களும் கம்போடியா நாட்டில் வேலை செய்தனர். இவர்கள் இருவரும் கொழுந்தூரைச் சேர்ந்த மகாதீர் முகம்மது என்பவர் மூலம், கம்போடியாவில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலைக்கு மாதம் 1000 அமெரிக்கா டாலர் ஊதியம் எனக் கூறி அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisment

ஆனால், அங்கு இருவரையும், ஒரு நிறுவனத்தில் அடைத்து வைத்து மோசடி அழைப்புகள் மூலம் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். இவர்கள் மறுத்ததால் அறையில் அடைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளனர். பின்னர், இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், நீதி ராஜன் மற்றும் அசோக் மணிக்குமார் ராமநாதபுர மாவட்ட எஸ்பி அலுலகத்தில் ஏடிஎஸ்பி அருணிடம் கடந்த வாராத்தில் புகார் அளித்தனர்.

publive-image

இந்த நிலையில், கம்போடியா பயணம், அங்கு என்ன நடந்தது, அவர்களின் கசப்பான அனுபவம் குறித்து நீதிராஜன் மற்றும் அசோக் மணிக்குமாரை நாம் நேரில் சந்தித்து பேசினோம். அப்போது நம்மிடம் பேசிய நீதி ராஜன், "கொழுந்தூரைச் சேர்ந்த மகாதீர் முகம்மது எனக்கு கொஞ்சம் பழக்கம். அப்படி அவன ஊர்ல சந்தித்த போது, என்ன மாப்ள எங்க வேலை பாக்குறான்னு கேட்டேன். அவன் இந்த மாறி, கம்போடியால வொர்க் பண்ணுறேன், கம்பெனி வேல இருக்குன்னு சொன்னான். என்ன வேல, செலரி எவ்வளவுன்னு கேட்டேன். அவன் 'டேட்டா என்ட்ரி' ஜாப், மாசம் 1000 அமெரிக்கா டாலருன்னு சொன்னான் .

நாங்க, சரி மாப்ள ஒரு ஆளுக்கு எவ்வளவு கட்டணும்னு கேட்டோம். அவன், ஒரு ஆளுக்கு ரெண்டரை லட்சம் ஆகும்ன்னு சொன்னான். சரி, நாங்க ரெடி பண்ணிட்டு சொல்லுறோம் மாப்ளன்னு சொன்னோம். ரெண்டு மாசத்துல கம்போடியா போன அவன், என்ன மாப்ள அமோவுண்ட் ரெடி பண்ணிட்டியா. என்ன ஆச்சு சொன்னதுன்னு கேட்டான்.

அப்புறம் கொஞ்ச நாள்லேயே, அசோக் பர்ஸ்ட்டும், நான் ரெண்டாவதுமா அமோவுண்ட அவங்க அம்மாட்ட கட்டுறோம். அப்ப அவுங்க அம்மா, சரிப்பா நான் தம்பிட்ட சொல்லியறேன். நீங்க பாத்து கிளம்புங்கன்னு சொன்னாங்க. உங்கள நம்பி தாம்மா போறோம்ன்னு சொன்னப்ப அவங்க, சரியப்பா ஒன்னும் பிரச்சன இல்ல. அவன் எல்லாத்தையும் பாத்துக்கிருவான்னு சொன்னாங்க.

அமோண்ட் கட்டுன ரெண்டு நாள்லேயே மகாதீர் கம்போடியாவுக்கு டிக்கெட் போட்டு விட்டான். அப்ப இங்க இருந்து கிளம்பயில பாத்திங்கன்னா டூரிஸ்ட் விசா போட்டுவிட்டான்.

ஆனா, எங்கள்ட்ட சொன்னது பிசினஸ் விசா என்று இடைமறிக்கிறார் அசோக் மணிக்குமார்.

publive-image

அசோக் மணிக்குமார் (28)

முன்பு கம்போடியா போன்ற நாடுகளில் டூரிஸ்ட் விசாவை பிசினஸ் விசாவாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இப்போது அந்த சட்டம் அங்கு இல்லை என்று கூறுகிறார் நீதிராஜன்.

தொடர்ந்து பேசிய அவர், "மகாதீர் கம்போடியா வந்ததும் எங்க விசாவ பிசினஸ் விசாவா மாத்தி தரேன் சொன்னப்ள. சரி, ஃபிரண்ட்டு கரேக்ட்டா மாத்தி குடுத்துருவானு நினச்சோம். அப்படி ஜூன் 12ம் தேதி கிளம்பி, தாய்லாந்து வழியா கம்போடியா போய் இறங்கிட்டோம். ஏர்போர்ட்ல இறங்குனதும், மகாதீர் கூடவே மூணு பேருன்னு கார்ல வந்தாங்க. நாங்க அவங்களோட சேர்ந்து ஒரு கெஸ்ட் ஹவுஸ்ல சேர்ந்து தங்கினோம். அப்ப நாம ஏன் இங்க தங்கியிருக்கோம்ன்னு கேட்டேன்.

அதுக்கு அவரு, இது நீங்க வேல செய்யப்போற சைனா கம்பெனிகாரங்க கெஸ்ட் ஹவுஸ் தான்னு சொன்னான். அப்படி அங்க ரெண்டு நாள் இருந்த பிறகு, சொன்ன மாறியே இண்டெர்வியூ நடந்துச்சு. நாங்க பாஸ் ஆயிட்டோம். அதோடு நாங்க கம்பெனில வொர்க்குக்கு சேர்ந்துட்டோம்.

கம்போடியா ஏர்போர்ட்லலேயே எங்க பாஸ்போர்ட் விசாவ வாங்கி வச்சுக்கிட்ட மகாதீர் இன்னும் ஒரு வாரத்துல, உங்களளோட இந்த கம்பெனில ஜாயின் பண்ணிருவேன்னு சொன்னான் . நாங்களும் அவன நம்பி கம்பெனிக்குள்ள போனோம். அப்ப பாஸ்போர்ட்டு எங்கன்னு கேட்டோம். அதுக்கு அவன், பாஸ்போர்ட்டு சைனா கம்பெனிகாரங்ககிட்ட இருக்கு. விசா அடிச்சு உங்கள்ட்ட குடுப்பான்னு சொன்னான். அத நம்பி நாங்களும் கம்பெனிக்குள்ள போயாச்சு.

கம்பெனிக்குள்ள போயி பாத்தா அப்புடியே ஜெயில் மாறி இருக்கு. இந்த நேரத்தல தான் தூங்கணும். இந்த நேரத்தல தான் எந்திருக்கணும். இந்த நேரத்தல தான் சாப்புடணும். கீழே போகக்கூடாதுன்னு ரூல்ஸ் போட்டாங்க. எங்க ரூம விட்டு எங்கயும் போக முடியாது. ஒன்னு ரூமுல இருக்கலாம். இல்லனா கம்பெனி ஆபீசுல இருந்து வேல பார்க்கலாம். அவ்ளோதான், அதவிட்டு எங்கயும் போக முடியாது. வெளில எங்கயும் போக முடியாது. ஒரே பில்டிங்ல தான் இருக்கணும். அங்க இருந்து எங்கயும் போக முடியாது. வேற எதாவது வேணும்முன்னா கீழ செகண்ட் ஃபுளோர்ல கடை இருக்கும், அங்க போயி தான் வாங்கிக்கணும். அதுவும் அந்த ஊரு ஃபுட் தான் இருக்கும். நம்ம ஊரு ஸ்நாக்ஸ்லாம் அங்க இருக்காது.

அப்படியே நாளு நகர ஆரம்பிச்சுருச்சு. இதுக்கிடையில, அந்த கம்பெனில ஜாயின் பண்ண பர்ஸ்ட் நாளே மகாதீருக்கு போன் பண்ணி கேட்டோம். என்ன மாப்ள இப்படி தான் இருக்குமா?, இங்க இருக்கவங்களாம் ஏதேதோ சொல்லுறாங்க. நீ எங்கள்ட்ட எதுவும் சொல்லல. டேட்டா என்ட்ரி ஜாப் தானாடா சொன்ன, அப்படின்னு கேட்டோம். அதுவுக்கு அவன், மாப்ள அவங்க சும்மா சொல்லுறாங்க, நீங்க அத கண்டுக்காதீங்கன்னு சொன்னான். ஓகே. நாங்க மொத நாள் வேலக்கி போயிட்டு, என்னனு பாத்துட்டு சொல்லுறோம்ன்னு சொன்னோம்.

அதுமாறியே வேலைக்கி போன, அங்க நைட் ஷிப்ட் தான். நைட்டு 10 மணிக்கு ஸ்டார்ட் பண்ணுவோம். மறுநாள் விடிஞ்சு மதியம் 12 மணி வரை வொர்க் பண்ணுவோம். மொத்தமா 15 மணி நேரம் வொர்க் பண்ணுவோம். செல நேரம் 16 மணி நேரம் வேல பார்க்கணும். அப்பறம் அங்க இருக்கவன் சொல்லுற வர நாம வேல பார்க்கணும். அந்த மாறி கணக்கே இல்லாம வொர்க் பண்ணுனோம்.

மொத நாள் வேல முடிஞ்சப்ப மகாதீருக்கு கால் பண்ணி கேக்குறோம். அவன், மாப்ள பர்ஸ்ட் நாள் அப்படி தான் இருக்கும். ஒன் வீக் ஆகியிருச்சுன்னா, அப்படியே போக போக பழகிரும்ன்னு சொன்னான். நாங்க, இந்த வேலயே வேணாம். இங்க எல்லாம் இல்லீகலா நடக்குது, எங்கள வேற வேலையில சேத்ருன்னு சொன்னோம்.

ஆனா அவன், எங்க கூட வந்த அவங்க மாமா பையன மட்டும் அங்கேருந்து வெளியே எடுத்துட்டான்."

"ஒரு வாரமா அழுதுகிட்டு இருந்து அவன், மாடில இருந்து குதுச்சு செத்துருவேன்னு சொன்னான் அதுனால தான் அவன வெளியே எடுத்தான்" என்று அசோக் குறுக்கிட்டு சொல்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "அவன வெளில எடுக்கும்போது தான் தெரிஞ்சுச்சு, அங்க இருந்து வெளில போகணும்ன்னா 3000 டாலர் கட்டணும்னு. ஏன்னா அவன் இவன 3,000 டாலருக்கு சைனீஸ்காரங்கட்ட வித்துருக்கான். அவன் வெளில போகையிலதான் இப்படி ஒரு விஷயம் நடந்துருக்கின்னு எங்களுக்கு தெரிய வந்துச்சு."

"அந்த ஷதாப்ங்குற பையன் மகாதீரோட சொந்த மாமா பையன்" என்று விவரிக்க தொடங்குகிறார் நீதிராஜன், அந்த பையன் அவங்க வீட்டுக்கு போன் பண்ணி ஊருக்கு வர 3000 டாலர் செலவாகும், அப்புறம் இங்க இருக்க பிரச்சன எல்லாத்தையும் சொல்லி, அவனுக்கு அமோண்ட் போட்டு விட்டாங்க. அப்புறம் அவன் ஊருக்கு போயிட்டான். சொந்த மாமா பையன்கிறதால அவன் அப்படி பண்ணுனான்.

அவனுக்கு நாங்க டெயிலி கால் பண்ணி இங்க இடம் சரியில்ல, ஃபுட் சரியில்லன்னு சொல்லுவோம். ரைஸ்லாம் பிளாஸ்டிக் மாறி இருக்குடா, தொட்டுகிற ஒன்னு கூட குடுக்க மாட்டீங்கிறாங்க டா. இத தின்னுட்டு நாங்க இங்க சாகுறதாடன்னு கேட்டோம். அதுக்கு அவன் மாப்ள இருகுங்க ஊறுகா பாட்டுலு கொண்டுவந்து குடுக்க சொல்லுறேன் அப்டின்னான்.

நாங்களும் எவ்ளோதான் கெஞ்சி கெதருனாளும், அவன் சமாளிகிச்சுருங்க, சமாளிங்க மாப்ள அப்டினே சொன்னான். அப்பறம், இப்ப ஒரு மூணு பேரு வாரானுங்க. அவனுங்கள உள்ள அனுப்பிட்டு உங்கள வெளில எடுத்தறேன்ன்னு சொன்னான். நான் வேல செய்யுற கம்பெனில நாம எல்லாரும் சேர்ந்து வேல செய்யலாம் அப்படின்னு சொன்னான். நாங்க, இந்த வேலயே புடிக்கல. எல்லாமே இல்லீகலா இருக்கு. எங்கள எப்படியாச்சும் வெளில எடுத்துரு அப்படின்னு சொன்னோம். அவன் அப்படியே போற இருந்தா போங்க, நான் உங்களுக்கு அப்பறம் அமோண்ட் தரேன்ன்னு சொன்னான். கடைசி வர அந்த வேலையில இருந்து எங்கள வெளியில எடுக்குற எண்ணமே அவனுக்கு இல்ல."

அப்படி என்ன வேலை பார்த்தீர்கள் அதைப்பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா என்று நாம் அவர்களை வினவினோம். அதற்கு நீதி ராஜன், "அங்க ஆன்லைன்ல சேட் பண்ணுற மாறி ஒரு ஃபேக் ஐடி ரெடி பண்ணும். அது பொண்ணு பேருல தான். அவங்களோடு பெரு, ஊரு, அட்ரஸ்ன்னு ஃபுல் ஜாதகத்தையே ரெடி பண்ணிக்கணும். அப்புறம் அந்த பொண்ணோட நேம்ல இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், கூகிள் சேட்ன்னு எல்லா சோசியல் மீடியலயும் அக்கவுண்ட் ரெடி பண்ணி வச்சுக்கணும். அப்புறம் ஃபிரண்ட் ரெக்யூஸ்ட் குடுத்து சேட் பண்ணனும். ஒன்லி யூ.எஸ் (United States) கஸ்டமருட்ட தான் பேசணும்.

publive-image

நீதிராஜன் (28)

போடோஸ், வீடியோஸ்க்கு எங்க கம்பெனில மாடல்ஸ் இருப்பாங்க. யூ.எஸ் கஸ்டமருக்கு ஃபிரண்ட் ரெக்யூஸ்ட் குடுத்து சேட் பண்ண ஆரம்பிச்சதும், அவங்க நம்புற மாறி பேசணும். திடீர்ன்னு வீடியோ கால் பேச கூப்ட்டா நாங்க எங்க மாடல்ஸ்க்கு கனெக்ட் பண்ணிருவோம். இப்படி பேசி ரிலேஷன்ஷிப்ப பில்ட் பண்ணனும். அதுக்கப்பறம் ரெண்டு பேரரோட ஃப்யூச்சர் பத்தி பேசணும். எப்படி வாழ போறோம். எங்க இருக்கப் போறோம். எல்லாத்தையும் பேசணும். அவங்களோட நம்பிக்கையை வளர்க்கணும். அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழுவோம். பெரிய வீடு காட்டுவோம். பெரிய கார் வாங்குவோம் அப்படின்னு சொல்லணும்.

publive-image

பிரபுக்களூர் (நீதிராஜன் கிராமம்)

அதுக்கு அவன் எப்படி வாங்குறது. பணம் இல்ல அப்புடின்னு சொல்லுவான். அதுக்கப்பறம் நாம, இந்த மாதிரி பிசினஸ் பண்ணுறேன். இந்த ட்ரேடிங் கம்பெனில நீயும் சேர்ந்து இன்வெஸ்ட் பண்ணுனா நாம ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய லாபம் சம்பாதிக்கலாம். அத வச்சு நாம லைஃப்ல சந்தோசமா இருக்கலாம், அப்படின்னு சொல்லி ஆச காட்டனும்.

சில பேரு நல்லா நம்புவாங்க. சில பேரு நம்ப மாட்டாங்க. அவங்கல இன்வெஸ்ட் பண்ண சொல்லணும். எவ்வளவு அமோண்ட் போடுறீங்களோ அந்த அளவுக்கு லாபம் பாக்கலாமுன்னு சொல்லணும். அத வச்சு அவங்க 5,000 டாலர், 10,000 டாலருன்னு இன்வெஸ்ட் பண்ணுவங்க. சில பணக்காரங்க 100K போடுறேன், 200K போடுறேன்னு சொல்லுவாங்க. அப்புடின்னா அது நம்ம காசுக்கு எவ்வளவுன்னு கணக்கு பண்ணிக்குங்க. 3,000 டாலருனாலே நம்ம ஊரு காசுக்கு ரெண்டரை லட்சம். அந்த அளவுக்கு அந்த பொண்ண லவ் பண்ண ஆரம்பிச்சு இருப்பாங்க. அதுனால ஒடனே அமோண்ட் போட ரெடியா இருப்பாங்க.

publive-image

நீதிராஜன் வீடு

அப்படி அவங்க இன்வெஸ்ட் பண்ணுனான தான் எங்களுக்கு செலரி, ரிவார்ட் கிடைக்கும். இல்லனா எங்கள கூட்டி போய் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுருவாங்க. கொஞ்சம் எதுத்து பேசுனா தனி ரூமுல போட்டு பூட்டி வச்சு அடி அடின்னு அடிப்பானுங்க, சோறு தண்ணி குடுக்க மாட்டாங்க. துப்பாக்கி வச்சுலாம் மெரட்டு வாங்க. ஒரு மாஃபியா கும்பல் மாறி இருப்பானுங்க. எங்க ஹேட்டு எல்லாருமே அந்த கும்பல்ல தான் இருப்பாங்க. அவங்க வேலைய இதுதான். ஆள எறக்க வேண்டியது, இந்த மாறி ஸ்கேம் பண்ண வேண்டியது.

அப்புறம் நாங்க போயி எங்களுக்கு ஒரு மாசம் செலரி தான் கொடுத்தானுங்க. 1000 டாலருன்னு சொல்லி 800 டாலர் தான் குடுத்தாங்க. ஏன் இப்பிடின்னு கேட்டா, இதுதான் உங்க பேசிக் செலரி. அதுக்கு மேல உங்க ஏஜென்ட் -கிட்ட பேசிக்க அப்புடின்னு சொல்லிட்டான். எங்க ஏஜென்ட் மகாதீருக்கு போன் பண்ணி பேசுனான அவன் அதே பழைய கத தான் சொல்லுறான். டெயிலியுமே அவனுக்கு கால் பண்ணுவோம். பாஸ்போர்ட் எங்க, சாப்பாடு சரியில்ல அப்படின்னு எதாவது ஒரு கம்பளைண்ட் சொல்லுவோம். ஆனா அவன் வழக்கம் போல சமாளிங்க மாப்ள, சமாளிங்க மாப்ள, இந்த சரி பண்ணிருவோம் மாப்ள, அந்த சரி பண்ணிருவோம் மாப்ள அப்டின்னே சொல்லுவான். என்ன பண்ணுறதுன்னு தெரியாம அந்த வேலைய அப்படியே கன்டினியூவா பாக்க ஆரம்பிச்சோம்.

அவன் எங்களோடு வேல செய்யுறான்னு நம்பி தான் நாங்க அங்க போனோம். அவன் சொன்ன மூணு பேரும் வரல. அவன் பேசுன ரெகார்ட்ல இருந்து மெசேஜ் வர எல்லாமே இருக்கு. நாங்க வேல செஞ்ச அந்த பில்டிங்க விட்டு வெளியேறவே முடியாது. சுத்தி துப்பாக்கி வச்ச ஆள் நிப்பானுங்க. கரண்ட் ஷாக் வச்சுருப்பானுக. கேட்ல எப்பவுமே ஆள் இருப்பானுக. மினி மிலிட்டரி வச்சு நடத்திக்கிட்டு இருப்பாங்க. போன அடி தான் விழும்.

5 மாசமா இதே பொழப்ப தான். வீட்டுலயும் திட்டு வாங்கணும். கம்பெனிக்காரன் -டையும் அடி வாங்கணும். ஷாக் வப்பான். இத்தன ப்ரசரையும் சமாளிச்சு, எங்களுக்கு உடம்பும் போயி, மென்ட்டலி டிப்ரஸ் ஆயிட்டோம். அனுபவிக்க முடியாத வேதனையை அனுபவிச்சோம். இதெல்லாம் எங்க ஏஜென்ட்டுட்ட சொன்ன அவன் அத ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டான். வழக்கம் போல சொல்லுற அதே ஸ்டோரி தான் சொல்லுவான்.

publive-image

நீதிராஜன் கொடுத்த எஃப்.ஐ.ஆர்
publive-image

நீதிராஜன் கொடுத்த எஃப்.ஐ.ஆர்

திடீர் ஒருநாள் கம்போடியா நாட்டு கவர்ன்மெண்ட் மாறிருச்சுன்னு சொல்லியும், இருக்கற ஸ்கேமிங் கம்பெனி எல்லாம் க்ளோஸ் பண்ண ஆடர் பாஸ் பண்ணிருக்காங்கன்னு சொல்லியும், கம்பெனில ரெய்டு பண்ணுனாங்க. அதுமுன்னாடியே நாங்க இந்தியன் எம்பஸிக்கு (இந்திய தூதரகம்) மெயில் அனுப்பி இருந்தோம். இந்த ரெய்டு மூலமா அங்க வேல செய்யுற எல்லாரையும் வெளியே ஏத்திட்டாங்க. எல்லாரையும் தனியாக ஒரு பெரிய ஹால்ல அடைச்சுட்டாங்க. அது ஒரு பெரிய ஜெயில் மாறி இருந்துச்சு.

அங்க இருந்தவங்க, உங்க இந்தியன் எம்பஸிய கான்டேக்ட் பண்ணி நீங்க வெளியே போயிகெல்லாம் சொன்னாங்க. அங்க மட்டும் 2000 பேருக்கு மேல் அடைச்சு வச்சு இருந்தாங்க. மலேசியன்ஸ், பாகிஸ்தானிஸ், பங்களாதேஸிஸ்ன்னு எல்லா கண்ட்ரி காரங்களும் அங்க இருந்தாங்க. நாங்க இந்தியன் எம்பஸிக்கு கால், மெஜேஜ்ன்னு சென்ட் பண்ணுனோம். அப்புறம், இங்க தமிழ்நாட்டுல இருக்க அரசியல் தலைவர்கள் இந்தியன் எம்பஸிக்கு தொடர்ச்சியா அழுத்தம் கொடுத்தாங்க. அப்பறம் இந்தியன் எம்பஸில இருந்து வந்த அதிகாரிங்க எங்கள வெளில எடுத்துட்டாங்க.

நாங்க ஜெயில இருந்தப்ப எங்க ஏஜென்ட்டுக்கு கால் பண்ணி பேசுனோம். பாஸ்போர்ட்ட வாச்சும் குடுடான்னு சொன்னோம். இல்லனா எமிக்ரேசன் போலீஸ்ல சொல்லுவோம்ன்னு சொன்னோம். அதுக்கு அவன் கால்ல விழுகுறேன் மாப்ள போலீஸ்ல சொல்லாதிய. பாஸ்போர்ட்டா குடுத்து விடுறேன்னு சொல்லி, ஒரு சைனீஸ்காரன் வந்து குடுத்தான். அப்படியிருந்தாலும், அவன பத்துன எல்லா தகவலையும் இந்தியன் எம்பஸில சொல்லிட்டோம். அவங்க நடவடிக்கை எடுக்கிறோம்ன்னு சொன்னாங்க.

சைனீஸ்காரன் குடுத்த பாஸ்போர்ட்ட எமிக்ரேசன் போலீஸ் செக் பண்ணுனா, ரெண்டு பேருக்கும் எந்த விசாவும் அடிக்கவே இல்ல. நாங்க போன டூரிஸ்ட் விசா மட்டும் தான் இருக்கு. அந்த டூரிஸ்ட் விசா அங்க 15 நாளைக்கு தான் செல்லும். அதுக்கு மேல அங்க இருக்குற ஒவ்வொரு நாளுக்கு 10 டாலர் அபராதம் கட்டணும். அதுப்படி நாங்க அங்க இருந்த 5 மாசத்துக்கு எங்களுக்கு சேர்த்து வச்சு அபராதம் போட்டாங்க. இந்தியன் எம்பஸில கேட்டா அவங்க, இந்த காசு எமிக்ரேசனனுக்கு போகும் பா அப்படின்னு சொல்லிட்டாங்க. காச கட்டிட்டு டிக்கெட் போட்டு நாட்ட விட்டு வெளில போலாம்ன்னு சொல்லிட்டாங்க.

publive-image

கொழுந்தூரைச் சேர்ந்த ஏஜென்ட் மகாதீர் முகம்மது

நாங்க எங்க ஏஜென்ட்ட அமோண்ட் ரெடி பண்ண சொல்லுறோம். அவன் இந்த கட்டுறேன், அந்த கட்டுறேன் எங்கள மறுபடியும் ஏமாத்த ஆரம்பிச்சுட்டான். ஏற்கனவே 15 நாள் ஜெயில்ல இருந்த நாங்க, இப்ப 15 நாள் ஹோட்டல்ல தங்கி இருந்தோம். அங்க ஒருநாளைக்கு நம்ம காசுக்கு 3000 - 4000 வர செலவாச்சு. அமோண்ட் ரெடி பண்ணுறேன்னு சொன்ன ஏஜென்ட் இந்த தரேன் அந்த தரேன்னு சொல்லி ஒரு மாசம் ஓடிருச்சு.

அப்பறம் அவன் சொல்லுறான், நீங்களே காச கட்டி ஊருக்கு போயிருங்க அப்டின்னுறான். அவங்க அம்மாட்ட இப்படி கூட்டிட்டு வந்து ஏமாத்திட்டான்னு சொல்லுறோம் அவங்க, தெரிஞ்சு தானே போனிய, அப்படின்னு சொல்லுறாங்க. ஏஜென்ட் பாத்தீங்கன்னா எங்கள 3000 டாலருக்கு வித்துருக்கான். எங்கள்ட்டயும் அமோண்ட் வாங்கிருக்கான். அந்த சைனீஸ்காரன்னுட்டயும் அமோண்ட் வாங்கிருக்கான்.

இவன நம்புனான இங்கயே இருக்க வேண்டியது தான்னு முடிவு பண்ணுன நாங்க, வீட்ல காசு ரெடி பண்ண சொல்லி, டிக்கெட் போட்டு ஊரு வந்து சேர்ந்தோம். ஊருக்கு போறதுக்கு முன்னாடி அந்த ஏஜென்ட் எவ்வளவு அமோண்ட்டா இருந்தாலும் நான் தரேன், அது 5 லட்சமா இருந்தாலும் ஓகே, அப்படின்னு சொன்னான். 15 ஆம் தேதி செலரி போடுவாங்க, 20 ஆம் தேதிக்குள் அமோண்ட் செட்டில் பண்ணி குடுத்துறேன்னு சொன்னான்.

ஊருக்கு வந்த மொத நாளே அவங்க அம்மாட்ட காச பத்தி பேசிட்டு, அவன கான்டேக்ட் பண்ணுனோம். அவன் ஒடனே எங்கள ப்ளாக் பண்ணிட்டான். அவங்க அம்மா, 'நீங்க போனிய, சம்பாரிக்காமையா இருந்திய, என் மையன் உங்கள வேல வாங்கி குடுக்காமயா இருந்தான். அங்கே போயி விட்டுட்டு ஓடிப்போயிட்டானான்னு' சொல்லுறாங்க. அவங்க மையன பத்தி சொன்னா, இப்படிலாம் விதண்டா வாதமா பேசாதிய, கேசு தானே கூடுப்பிய. முடிஞ்ச குடுத்துங்க அப்டின்னு அவங்க அம்மா தெனாவெட்ட பேசுறாங்க. எங்க கஷ்டத்த எல்லாம் சொன்னா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும்ன்னு சொல்லுறாங்க.

அதோடு தான் எஸ்.பி ஆபீசுல போய் கம்ளைண்ட் குடுத்தோம். நியூஸ் சேனல்ஸ்க்கு பேட்டி குடுத்தோம். எஸ்.பி அவங்க கேச கிரைம் ப்ராஞ்சுக்கு மாத்தி இருக்காங்க. ஆக்ஷன் எடுப்பேன்னு உறுதியா சொன்னாங்க. அதுபடி எஃப்.ஐ.ஆர் போட்டுருங்க. போலீஸ்ல அமோண்ட் கட்டுன ப்ரூப் வச்சுருக்கீங்களானுக்கு கேட்டாங்க. நாங்க ஃபிராண்ட் அம்மான்னு நம்பிக்கையில குடுத்தோம். எந்த ப்ரூப் இல்ல சார்ன்னு சொல்லிட்டோம். அவங்க அம்மா கையில ஒன்றை லட்சம் குடுத்துருக்கோம். அவனுக்கு அக்கோண்டல ஒரு லட்சம் போட்டு விட்டுருக்கோம்னு சொன்னோம்.

இந்த கம்ளைண்ட்க்கு அப்பறமும், அதுக்கு முன்னாடியும் எங்க ஏஜென்ட் தரப்பில இருந்து எந்த பதிலும் கிடைக்கல. இப்ப பாத்திங்கென அவங்க ஃபேமிலி அந்த ஏஜென்ட்க்கு பெயில் வாங்க ரெடி பண்ணுறதா எங்க தரப்பு வக்கீல் சொன்னாங்க. நாங்க அதுக்கு அப்பீல் பண்ணலாமுன்னு இருக்கோம். போலீஸ் தரப்பில இருந்து எங்களுக்கு நல்ல சப்போர்ட் இருக்கு. எங்கள மாறி இன்னும் நிறைய பேரு மாட்டிகிட்டு இருக்காங்க. அவங்கள மீட்க நடவடிக்கையும் எடுத்துக்கிட்டு இருக்காங்க. எங்கள மாறி யாரும் இனி இப்படி போயிராதீங்க. அதுதான் நாங்க வைக்கிற வேண்டுகோள். எங்க ஏஜெண்ட்ட கட்டுன அமோண்ட் கெடச்ச, நாங்க குடுக்க வேண்டிய கடன குடுத்துட்டு நிம்மதியா இருப்போம். இல்லனா என்ன பண்ணுறதுன்னே தெரியல." என்று கண்ணீர் மல்க கூறுகின்றனர் நீதிராஜனும், அசோக் மணிக்குமாரும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamilnadu Ramanathapuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment