கன மழை காரணமாக சென்னை பல்கலை கழகம், அண்ணா பல்கலை கழகம், அம்பேத்கர் சட்ட பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி தொடங்கியது. அதிலிருந்து சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று (2.11.17) மாலையில் இருந்து தொடர்ந்து ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்தது. இதையடுத்து, சென்னையில் மையப்பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நேற்று மட்டும் சென்னையில் 15 செ.மீ மழை பெய்துள்ளது.
பக்கிங்காம் கால்வாய் நிரம்பியதால் சென்னை மயிலாப்பூரில் வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்ததால், மாலையில் இருந்து அலுவலகம் முடித்து சென்ற பலரும் வீடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டணம், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல் முறையாக கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பலகலை கழகங்கள் அறிவித்த, இன்று நடை பெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. அண்ணா பல்கலை கழகம், சென்னை பல்கலை கழகம், அம்பேத்கர் சட்ட பல்கலை கழகம் ஆகிய பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர். தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.