மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து : மத்திய அவசர சட்டமே தீர்வு

இந்த சிக்கலை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஒரே கண் கொண்டு தான் பார்க்கும்

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அரசு மேல் முறையீடு செய்யும் என்று சொல்லியுள்ளது. ஆனால் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே பல கிடைக்கும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், ஊரகம் மற்றும் மலைப் பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்களை வழங்கி மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் சேர்த்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நிலைக்கு காரணம் மாணவர் சேர்க்கை முறையில் மத்திய அரசு கொண்டு வந்த சமூகநீதிக்கு எதிரான விதிகள் தான்.

தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவமனைகளில் இரு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்திய மருத்துவக் குழுவின் மாணவர் சேர்க்கை விதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவின் அடிப்படையில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள அனைத்து சிக்கல்களுக்கு இதுதான் காரணமாகும்.

இந்த விஷயத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நிலையில், இவ்வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தார். அதேநேரத்தில், அரசு மருத்துவர்களுக்கான 50% ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டாலும், ஊரகப்பகுதி, மலைப்பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி ஆகியவற்றில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்களை வழங்கி, அதனடிப்படையில் அவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடம் வழங்கத் தடை இல்லை என்றும், ஊரகப்பகுதி, மலைப்பகுதி மற்றும் எளிதில் அணுகமுடியாத பகுதிகளை அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

இத்தீர்ப்பை தமிழக அரசு அறிவார்ந்த முறையில் செயல்படுத்தியிருந்தால், அரசு மருத்துவர்களுக்கு இப்போது கிடைத்த அளவுக்கு இடங்கள் கிடைத்திருக்காது என்றாலும், இயல்பாக கிடைப்பதை விட சற்று அதிக இடங்கள் கிடைத்திருக்கும். ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள அனைத்து பகுதிகளையும் ஊரகப்பகுதி, மலைப்பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி என அறிவித்து, அங்கு பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்களை வழங்கியது. இதனால் மொத்தமுள்ள 1066 மாணவர் சேர்க்கை இடங்களில் 999 இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு கிடைத்தன. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு தான், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக ரத்து செய்துள்ளது.

ஊரகப்பகுதி, மலைப்பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை தமிழக அரசே தீர்மானிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றமும், இந்திய மருத்துவக் குழுவும் அறிவித்திருந்த நிலையில், அந்த அதிகாரத்தை தமிழக அரசு முறையாகவும், நெறியாகவும் கையாளத் தவறியதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஊரகப்பகுதி, மலைப்பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை கிட்டத்தட்ட உயர்நீதிமன்றமே அடையாளம் காட்டியிருப்பதால், மருத்துவ மேற்படிப்பில் சேர்க்கப்பட்ட ஊரக மருத்துவர்களில் பலர் தங்களின் வாய்ப்புகளை இழக்க நேரிடும். இது நல்வாய்ப்புக்கேடானது.

இந்தச் சிக்கலில் தமிழக அரசின் நோக்கத்தையும் குறைகூற முடியாது. அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதால், அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கம் தான் இதற்குக் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சிக்கலை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஒரே கண் கொண்டு தான் பார்க்கும் என்பதால் மேல்முறையீட்டால் எந்த நன்மையும் விளையும் என்று தோன்றவில்லை; அது விழலுக்கு இறைத்த நீராகவே அமையும்.

மாறாக, மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தான் இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்பதால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இத்தகைய இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் விதத்தில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். அத்துடன், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதால், அதற்கு இதை நிபந்தனையாக முன்வைத்து மருத்துவக் கல்வி சார்ந்த அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

×Close
×Close