அணு உலைகள் எதிர்க்கும் மாநிலத்திற்கு மின்சாரம் கிடையாது: மத்திய அமைச்சர்

அணுஉலை அமைக்க இடம் அளிக்கும் மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதில் முன்னுரிமை வழங்க முடியாது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மின்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்திருந்தார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ”கூடங்குளத்தில் உள்ள 3-வது மற்றும் 4-வது உலைகளில் உற்பத்தியாகும் 2000 மெகாவாட் மின்சாரத்தைத் தமிழகத்துக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பால், நெய்வேலி அனல்மின் நிலையத்திற்கு ரூ.806 கோடி வரை செலவு குறைந்துள்ளது. அதாவது, நிலக்கரி கொள்முதல் விலை குறைந்துள்ளது. உதய் மின்திட்டம் மூலம் தமிழ்நாட்டுக்கு நிதி மிச்சமாகும். தமிழகத்தில் மின்சாரத் துறை வளர்ச்சி அடையும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “”எண்ணூர் துறைமுகம் தனியார் மயமாக்கப்படாது. செய்யூர் நிலக்கரி மின் திட்டத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். அதே சமயம் அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் அளிக்க வாய்ப்பில்லை. மின் தேவையை பூர்த்தி செய்ய அணுமின்சார உற்பத்தி அவசியம். அணுஉலை அமைக்க இடம் அளிக்கும் மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதில் முன்னுரிமை வழங்க முடியாது. தமிழக அரசின் நியாயமான கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

×Close
×Close