‘ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது’ என ட்விட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் மத்திய, மாநில அரசுகளை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், ‘பிக் பாஸ்’ மேடையில் அரசியல் பேசிவந்தார். அதுமட்டுமல்லாமல், வெளிநிகழ்ச்சிகளிலும் அரசியல் பேசினார். அவரின் வேகத்தைப் பார்த்து விரைவிலேயே அரசியலில் கமல் தீவிரமாக இறங்கலாம் என்று ஆவலோடு எதிர்பார்த்தனர்.
கமல்ஹாசனின் பிறந்தநாளான 7-ம் தேதி புதுக்கட்சி பற்றிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அன்றைய தினம் முக்கிய அறிவிப்பு இருக்கும் என ‘ஆனந்த விகடன்’ வார இதழில் தான் எழுதிவரும் தொடரில் குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்.
‘இளைஞர்படை ஒன்று காத்திருப்பதை என்னால் உணர முடிகிறது. அவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்துவிட்டது. வரும் நவம்பர் 7ஆம் தேதி அவர்களுடன் தொடர்புகொள்ளத் தடையில்லாமல் உரையாடும் வழி ஒன்றை ஏற்படுத்தி அறிவிக்கவுள்ளேன். அவர்களுடன் அளாவளாவுவதற்கல்ல; பாசறைகள், பயிற்சி முகாம்கள் ஏற்படுத்தி ஆகவேண்டிய காரியங்களுக்கான செயல்திட்டம் தீட்ட.
திறமையாளர்கள், படிப்பாளிகள், உழைப்பாளிகள் அனைவரையும் சாதிவரையறைகள் தாண்டி ஒன்றுகூட வைக்கும் சங்கநாதம் தனியே தேவையில்லை. அது ஏற்கெனவே நம் மனங்களில் ரீங்கரிக்கத் துவங்கி நாள்கள் பல ஓடிவிட்டன.
இனியும் தாமதியாது கூடுவோம். பட்டிமன்றம் போட்டுப் பேச அல்ல; செயல்திட்டங்கள் தீட்ட. திட்டங்களுடன் நான் கூட்ட நினைப்பது வெறும் தொண்டர் கூட்டத்தை மட்டுமல்ல; தலைவர்களின் பெருங்குழுவை. இதை ஒரு தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் இப்போதே தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். தியாகமாக நினைத்து வருபவர்கள் எதையோ எதற்காக இழப்பது போன்ற உணர்வுடன் வந்து எம்மைத் தேவையில்லாமல் கடன்படச் செய்வார்கள். தமிழகத்திற்குச் செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். செய்வார்கள் எனக் காத்திருந்தது போதும். நம்மால் முடியும், என்னால் முடியும். என்னால் முடியும் என்றால் உன்னாலும் முடியும்.
நமது இயக்கத்துடன் சேர்ந்து பணிசெய்யப் பல இயக்கங்கள் தயாராக உள்ளன. அவர்களுடன் பேசியதில் வந்த புரிதலும் அடக்கமும், நாம் அவர்களுடன் சேர்ந்து பணிசெய்து தமிழகத்திற்கு பலம் சேர்க்க வேண்டும் என்பதே. உதாரணமாக, இரண்டு வருடங்களாக இயங்கிவரும் அறப்போர் இயக்கம் பல கோணங்களில் ஊழலை நேர்கொண்டு தாக்கும், நீக்கும் இயக்கம். இதற்குப் பின்னால் வெறும் வீரம் மட்டுமல்ல... அயராத துப்பறிவும் புலனாய்வும் தீராத்தேடலும் இருக்கின்றன’ என்று அந்த தொடரில் எழுதியுள்ளார் கமல்ஹாசன்.
எனவே, நவம்பர் 7-ம் தேதி அரசியல் பற்றி மிகப்பெரிய முடிவை கமல் அறிவிக்கப் போகிறார் என இன்று காலையில் இருந்து எல்லோரும் பரபரப்பாகப் பேசி வந்தனர். இந்நிலையில், ‘ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட பழக்கம். பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.