திருநெல்வேலியில் நடைபெற்ற கந்து வட்டி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் படம் வரைந்ததாக கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டார்.
கார்ட்டூனிஸ்ட் பாலா, முன்னணி இதழ்களில் கார்ட்டூனிஸ்டாக பணியாற்றியவர்! தமிழ் தேசிய அமைப்புகளில் ஆர்வம் கொண்டவர். தமிழக வளம் சார்ந்த மக்கள் போராட்டங்களுக்கு தனது கார்ட்டூன்கள் மூலமாக துணை நிற்பவர்! இதனால் ஈழ ஆர்வலர்கள், தமிழ் தேசியவாதிகள் மத்தியில் அதிக அறிமுகம் இவருக்கு உண்டு.
பாலாவின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர். எனினும் பணி நிமித்தமாக சென்னை வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று பிற்பகலில் திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸார் என அறிமுக செய்துகொண்ட சிலர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள பாலாவின் வீட்டுக்கு வந்தனர். அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கூடங்குளம் போராளி சுப.உதயகுமாரன் கண்டனப் பதிவு
அவரது கைது குறித்து திருநெல்வேலி போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, ‘அண்மையில் கந்து வட்டிக் கொடுமை காரணமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில், முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பாலா கார்ட்டூன் வரைந்திருந்தார். அது தொடர்பாகவே கைது செய்திருக்கிறோம்’ என்றார்கள்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புகார் அடிப்படையில் போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 501, தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் பாலா கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் இந்த கைது சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கார்ட்டூன் வரைந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது மிக அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது. பாலாவின் கைதுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.