தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதிது புதிதாக திருப்பம் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. சிறையில் இருந்து தினகரன் வெளிவந்த பின்னர், இதுவரை 32 எம்.எல்.ஏ.க்கள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ., சரவணன் பேசியதாக கூறப்படும் வீடியோ, கூவத்துார் பேரத்தை அம்பலப்படுத்தி உள்ளது. இதையடுத்து, வீடியோ பேர ஆதாரங்கள் அடங்கிய சி.டி.,யுடன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று புகார் அளித்தார். இப்படி பல நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்து வருவதால், தற்போதைய அரசு நீடிக்குமா அல்லது வேறு புதிய திருப்பம் ஏற்படுமா என்ற குழப்பம் உருவாகியுள்ளது.
முன்னதாக, ஆர்.கே.நகர் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் புகாரால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எட்டு கேள்விகளைக் கேட்டிருந்தார். குறிப்பாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று பதில் தரப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்வதற்கான பரிந்துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
வைரக்கண்ணன் கேட்ட மற்ற கேள்விகள் ஆர்.டி.ஐ.க்கு தொடர்பு இல்லாதது என்று கூறி அதற்கு பதில் அளிக்கப்படவில்லை.