சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு!

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக வழக்கு

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டமானது தேசிய நெடுஞ்சாலை சட்டப்படி செயல்படுத்தப்பட உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை சட்டப்படி நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக அறிவிப்பானை வெளியான 21 நாட்களுக்குள் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். ஆனால் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் அவசியம் இல்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பொதுமக்களின் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு “நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை” சட்டம் கொண்டு வந்தது.

அதன்படி, நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக அறிவிப்பாணை வெளியான 21 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்க வேண்டும் என்ற விதி இருந்த போதிலும் தற்போது மக்கள் கருத்து கேட்காமலேயே நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொள்வதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 105 படி, இந்த சட்டத்தின் அம்சங்கள் எதுவும் தேசிய நெடுஞ்சாலை சட்டத்திற்கு பொருந்தாது என குறிப்பிட்டிருப்பது மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே சட்டப்பிரிவு 105 மற்றும் தற்போது நடைபெற்று வரும் நில கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சட்ட விரோதம் என அறிவித்து தடை விதிக்க வேண்டும் எனவும் சுந்தர்ராஜன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close