ஆண்டாள் சர்ச்சை : கவிஞர் வைரமுத்து மீது கொளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு

ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டாளைப் பற்றித் தவறாக எழுதியதாக கூறப்படும் விவகாரத்தில், கவிஞர் வைரமுத்து மீது கொளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ஆண்டாளை தவறாக சொல்லியிருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி சம்பத் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எச்.ராஜா, கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை வசைபாடியிருந்தார்.

இந்த விவகாரம் பெரிதாக, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். எச்.ராஜாவும் வைரமுத்துவை இழிவாகப் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், பிரச்னை ஓயாமல் இழுத்துக் கொண்டே போகிறது. பல இடங்களில் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் வைகோ, ஸ்டாலின், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சமுதாய நல்லிணக்கப் பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், வைரமுத்து மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார், வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

×Close
×Close