மாட்டிறைச்சி விவகாரத்தில் சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டமன்றத்தில் மாட்டிறைச்சி விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதேபோல, அதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்களும் இது தொடர்பாக விவாதம் செய்னதர்.
அப்போது இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். ஆனால், அந்த பதிலில் திருப்தியில்லை எனகூறி திமுக வெளிநடப்பு செய்தது.
இதன் பின்னர், அதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்களான தமீமுன் அன்சாரி, கருணாஸ் மற்றும் தமிழரசு ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு தடை சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக, சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் உட்பட தோழமை கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால், இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
ஜனநாயக நாட்டில் ஒருவர் இதைத்தான் உண்ண வேண்டும் என உத்தரவிடும் அதிகாரம் யாருக்குமே இல்லை என்ற நிலைப்பாட்டை உணர்ந்தும் சர்வாதிகார போக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.
நான் சென்னைக்கு 17-வயதில் வந்த போது சாலையோர கையேந்தி பவனில் தான் சாப்பிடுவேன். அப்போது, அதற்கு இறைச்சியாக சாப்பிட முடியும் என்றால் அது மாட்டுக்கறி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மாட்டிறைச்சி என்பது மக்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. பிடித்தவர்கள் மாட்டிறைச்சியை சாப்பிடலாம், பிடிக்காதவர்கள் அவற்றை சாப்பிடாமல் இருக்கலாம். என்னைப்போன்ற மாமிசத்தை விரும்பி சாப்பிடக் கூடிய எண்ணற்ற மக்கள் வாழக்கூடிய இந்த நாட்டில், இவர்கள் இதை செய்யக் கூடாது என கூறுவது மனித உரிமைக்கு எதிரானது என்பதை மக்கள் சார்பிலும் முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதனை முதலமைச்சர் கவனத்தில் கொண்டு, மாட்டிறைச்சி விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். மேலும், மத்தியில் ஆளும் பாஜக எடுத்துள்ள இந்த முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.