சட்டமன்றத்தில் இருந்து அதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் முதலமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை என கூறி அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் அனைவரும் அதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சித்தலைவர் தமீமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, புதுச்சேரி, மேகலயா உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியில் இருக்கும் கோவாவிலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இன்று சட்டமன்றத்தில் நாங்களும், எதிர்க்கட்சியும் இந்த கோரிக்கையை எழுப்பினோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.
இது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அரசு, அவர்கள் இருந்திருந்தால் எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியாவில் மொத்தம் உள்ள 2 சதவீத மக்களின் கலாச்சாரத்தை திணிக்க முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த தடைக்கு பின்னர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ரூ.25,000-க்கு விற்பனை செய்யப்பட்ட அடிமாடு தற்போது ரூ.5,000-க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உணர்வு, உரிமைகளை மதிக்க வேண்டும். எனவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள தடைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். இதற்காக ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.