மாட்டிறைச்சி விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதிலில் திருப்தியில்லை என கூறி திமுக வெளிநடப்பு செய்தது.
இது தொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது : மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி நான் தனி தீர்மானம் கொண்டு வந்தேன்.
இது தொடப்பாக சட்டமன்றம் தொடங்கிய நாளிலேயே சபாநாயகரிடம் நான் கடிதம் கொடுத்திருந்தேன். அந்த வகையில் இன்று இது தொடர்பாக தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரச்சனை எழுப்பினேன்.
கேரள சட்டமன்றம், புதுச்சேரி சட்டமன்றம், மேகலாயா சட்டமன்றம் ஆகியவற்றில் மத்திய அரசின் இந்த தடை உத்தரவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கேயும் இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திமுக மட்டுமல்லாமல், காங்கிஸ் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் அதிமுக-வின் தோழமை கட்சிகளாக இருக்கக்கூடிய ஓரிரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரினர்.
ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் சொல்லாமல் ஏதோ ஒரு அறிக்கையை படித்துவிட்டு உட்கார்ந்து கொண்டார். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவில்லை என்றாலும் முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்த்தோம். இதனை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
பாஜக என்ன செய்தாலும், அதற்கு அதிமுக அடிபணிந்து செயல்படுகிறது. இது மாநில சுயாட்சிக்கே எதிரான வகையில் உள்ளது. அதிமுக ஆட்சி பாஜக-வின் காலில் விழுந்து பஜனை பாடும் கட்சியாக இருக்கிறது. அதற்கு இன்று சட்டமன்றத்தில் நடந்த சம்பவங்கள் சாட்சி.
வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றைக் கண்டு அஞ்சி நடுங்கிக்கொண்டு, பாஜக-வின் காலில் எடப்பாடி பழனிசாமி தலையிலான ஆட்சி விழுந்துள்ளது என்று கூறினார்.