மாட்டிறைச்சி தடைக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்!

இறைசிக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் தடைக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறைச்சிகாக கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இந்த உத்தரவு மனித உரிமைகளை மீறும் வகையில் உள்ளது என்றும், மக்கள் உண்ணும் உணவை மத்திய அரசு தீர்மானிக்கக் கூடாது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், மாட்டிறைச்சி விவகாரத்தில் கேரளா, மேகலாயாவைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்றத்திலும் மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று, மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. எனினும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

×Close
×Close