காவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது... தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் கடந்த ஜூலை 2ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் குழுவின் தலைவராக மத்திய நீர்ப்பாசன மேலாண்மை தலைமை பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் தலைமைப் பொறியாளர்கள், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து செயல்படவுள்ள ஒன்பது பேர் அடங்கிய அக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மத்திய நீர்வள அமைச்சக அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில், தமிழக பிரதிநிதியான செந்தில்குமார் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகிய இருவர் கலந்து கொள்ள உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அந்த கூட்டத்தில், ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு சேர வேண்டிய 31.24 டிஎம்சி நீரை, மூன்றாக பிரித்து 10 நாட்களுக்கு ஒரு முறை கர்நாடகா வழங்கவேண்டும் என வலியுறுத்த முடிவெடுத்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

×Close
×Close