காவிரி பிரச்னை குறித்து ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் - தோழமைக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்டா மாவட்டங்கள் பிரசார பயணம் மேற்கொண்டனர். நேற்று (ஏப்ரல் 12) அந்தப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியாக கடலூரில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று காலை 10 மணி முதல் சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுப்படி இன்று பகல் 12 மணிக்கு தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் சென்றனர்.
ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அவர்கள் மனு அளித்தனர்.
இந்த சந்திப்பில் மு.க.ஸ்டாலினுடன் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆளுனர் சந்திப்புக்கு பிறகு பகல் 12.55 மணிக்கு ராஜ் பவன் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிரதமரை சந்தித்து முறையிட ஏற்கனவே முதல்வரிடம் அனைத்துக் கட்சிக் கூட்டம் சார்பில் கோரிக்கை வைத்தோம். ஆனால் அந்த கோரிக்கையே பிரதமருக்கு வரவில்லை என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். எனவே நேற்று விமான நிலையத்தி வைத்து முதல்வர் கொடுத்த மனுவில் கூட காவிரி மேலாண்மை வாரியம் பற்றி கூறியிருக்கிறாரா? அல்லது, எங்கள் ஆட்சிக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறாரா? எனத் தெரியவில்லை.
முதல்வர் மூலமாக பிரதமர் சந்திப்புக்கு அனுமதி கிடைக்காததால், ஆளுனரிடம் அதே கோரிக்கையை வைத்தோம். எங்களின் உணர்வுகளை புரிந்திருப்பதாகவும், பிரதமரின் சந்திப்புக்கு உதவி செய்வதாகவும் ஆளுனர் கூறினார்.’ என்றார் ஸ்டாலின்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.