‘பெரியண்ணன்’ திமுக... காவிரியைவிட இது பெரிய சிக்கலா இருக்கே!?

அனைத்துக் கட்சிகளும் சந்திக்க வேண்டிய தேதியை ‘ஏப்ரல் 1’ என திமுக செயற்குழு எப்படி முடிவு செய்ய முடியும்? இந்தத் தேதி மற்ற தோழமைக் கட்சிகளுக்கு...

ச.செல்வராஜ்

காவிரி விவகாரம் உள்பட பொதுப் பிரச்னைகளில் திமுக.வின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என கேட்கிறார்கள், அதன் கூட்டணி கட்சியினரே! திமுக என்ன தவறு செய்கிறது?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதப்படுத்தும் விவகாரம், தமிழகத்தை போராட்ட மயமாக்கியிருக்கிறது. இதில் தமிழகத்தை ஆளும் அதிமுக வீரியமான போராட்டங்களை முன்னெடுக்க தயாராக இல்லை. காரணம், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. சசிகலா குடும்பத்தினர் மீது பாய்ந்த வருமான வரித்துறை இவர்கள் மீது பாய்ந்தால் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள்.

காவிரி விவகாரத்தில் டெல்லி அதிகார வர்க்கத்தின் கோபத்திற்கு ஆளாகாத அளவில் குரலை உயர்த்திக் கொள்வது மட்டுமே அதிமுக தரப்புக்கு கிடைத்திருக்கும் உரிமை! இது சாதாரண மக்கள் வரை தெரிந்துபோன ரகசியம் என்பதால், ஆளும் மாநில அரசிடமோ அதிமுக.விடமோ யாருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.

காவிரி விவகாரத்தில் சற்றேனும் வலிமையாக போராடக்கூடிய வாய்ப்பு உள்ள கட்சி திமுக.தான்! அரசியல் ரீதியாக பாஜக.வை எதிர்க்கும் நிலைப்பாட்டில் திமுக உறுதி காட்டுகிறது. திமுக.வின் பாரம்பரிய வாக்கு வங்கியான மைனாரிட்டி சமூக வாக்குகளை குறி வைத்து டிடிவி தினகரன் காய் நகர்த்தி வரும் நிலையில் திமுக.வுக்கு இந்த நிலைப்பாடு மிக முக்கியம்!

எனவே சமீப நாட்களாக மாநில அரசை சாடுகிற அளவுக்கு, மத்திய அரசை சாடுவதிலும் கவனம் செலுத்துகிறது திமுக! பாஜக.வை வலிமையாக திமுக எதிர்க்கவேண்டிய இன்னொரு அரசியல் நெருக்கடி என்னவென்றால், அதை செய்தால்தான் தமிழகத்தில் வலிமையான கூட்டணியை உருவாக்க முடியும். இன்று வரை சில பல கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் காங்கிரஸ். இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை திமுக கட்டிக் காப்பாற்றுவது, பாஜக எதிர்ப்பு என்கிற ஒற்றைப் புள்ளியில்தான்!

இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் வலிமையான கட்சி என்ற அடிப்படையில் அந்தக் கட்சிகளும் இயல்பாக திமுக.வுடன் இணைந்து அரசியல் செய்யவே விரும்புகின்றன. அதேசமயம், அந்தக் கட்சிகளுக்கு இருக்கும் ஒரே உறுத்தல், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் அணுகுமுறைதான்!

இதற்கு லேட்டஸ்ட் உதாரணம், ஏப்ரல் 1-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதாக திமுக வெளியிட்டிருக்கும் அறிவிப்பு! தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இப்படி ஒரு கூட்டத்தை திமுக நடத்துவது பொருத்தமானதுதான்! அப்படி ஒரு கூட்டம் நடத்த வேண்டிய தேவை குறித்து திமுக செயற்குழுவில் விவாதித்ததும், அந்தக் கட்சியின் ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்துவதாக கூறிக்கொள்ள முடியும்.

ஆனால் அனைத்துக் கட்சிகளும் சந்திக்க வேண்டிய தேதியை ‘ஏப்ரல் 1’ என திமுக செயற்குழு எப்படி முடிவு செய்ய முடியும்? இந்தத் தேதி மற்ற தோழமைக் கட்சிகளுக்கு தோதான தேதிதானா? எந்தெந்த கட்சிகளை அழைப்பது? கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோரை அழைப்பதா? என எந்த திட்டமிடலையும் இதர தோழமைக் கட்சிகளுடன் கலந்து பேசாமல், திமுக.வே அனைத்தையும் முடிவு செய்வது ‘பெரியண்ணன்’ மனப்பான்மை ஆகாதா?

ஒருவேளை கருணாநிதி தலைமையில் இந்த செயற்குழு நடந்திருக்குமானால், ‘திமுக முன்னின்று ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவது என்றும், இதர தோழமைக் கட்சிகளுடன் பேசி கூட்டத் தேதியை முடிவு செய்வது’ என்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும். பிறகு கருணாநிதி மனதில் தோன்றிய ஒரு தேதியை மற்ற கட்சியினருக்கு தெரியப்படுத்தி, அனைத்துக் கட்சிக் கூட்ட தேதி அன்று மாலையே தனி அறிக்கையாக வந்திருக்கும்!

ஐம்பதாண்டு அரசியல் வாழ்வைத் தொட்டிருக்கும் ஸ்டாலின் இன்னமும் இந்த அணுகுமுறைக்கு வராதது பெரிய பலவீனம்! பொதுவாகவே சமகால அரசியல் இயக்கத் தலைவர்களுடன் ஸ்டாலினுக்கு சுமூகமான உறவு இல்லை என்பது கசப்பான உண்மை!

கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அறிவாலயத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடம் 2 சதவிகிதம்! அது பெரிய விஷயமில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை ‘டீஸ்’ செய்கிற விதமாக ஸ்டாலின் குறிப்பிட்ட சில வார்த்தைகள் காரமானவை!

தமிழகத்தில் மிக இளைய வயதில் அமைச்சர், துணை சபாநாயகர் என பதவிகளை வகித்து, தனிக்கட்சி நடத்தி, மத்திய அமைச்சர் பதவி வரை உயர்ந்தவர் அரசர்! தமிழ்நாட்டின் சீனியர் தலைவர்களில் அவரும் ஒருவர்! கருணாநிதியால் மிகவும் மரியாதையாக நடத்தப்பட்ட தலைவர்களில் அவரும் ஒருவர்! ஸ்டாலின் அணுகுமுறை அவரை காயப்படுத்தினாலும், கட்சி நிலை கருதி கூட்டணியில் தொடர்கிறார்.

விடுதலை சிறுத்தைகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இதேபோல பல நிகழ்வுகள் உண்டு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் எப்போதுமே கூட்டணிக்கு பங்குண்டு. ஸ்டாலினுடன் யாருக்கும் சரியான புரிதல் இல்லாததும்கூட கடந்த இரு தேர்தல்களில் திமுக சரியான கூட்டணி அமைக்காததற்கு ஒரு காரணம்!

கூட்டணியின் அவசியத்தை எல்லோரும் உணர்ந்திருக்கும் இந்தச் சூழலில், ஈரோடு மண்டல திமுக மாநாட்டில் ஸ்டாலின் ஆற்றிய உரையும் இங்கே கவனிக்கத்தக்கது. ‘யாருடைய தயவும் இல்லாமல் ஆட்சி அமைப்போம். அடுத்த 30 ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சியை யாரும் அசைக்க முடியாது’ என்றார் ஸ்டாலின். கட்சிக் காரர்களுக்கு நம்பிக்கை ஊட்டவோ, தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவோ பேசுவது நல்ல விஷயம்! ஆனால் அந்தப் பேச்சு கூட்டணி அமைவதற்கும், வெற்றிக்கும் இடையூறாக அமைந்துவிட்டால்?

திமுக.வை விட்டால் இதர எதிர்க்கட்சிகளுக்கு வேறு நாதியில்லை என்கிற அரசியல் சூழலே இன்று வரை திமுக.வின் பலம்! ஆனால் இந்தச் சூழல் இப்படியே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் ‘மூவ்’ இன்னும் தெளிவாகவில்லை.

டிடிவி தினகரனுக்கு வேறு பல பலவீனங்கள் இருந்தாலும், ஸ்டாலினின் முக்கிய பலவீனத்தை அவர் தனது பலமாகப் பெற்றிருக்கிறார். ம்! தன்னை மிகத் தீவிரமாக எதிர்க்கும் தலைவர்களிடமும்கூட தனிப்பட்ட முறையில் பக்குவமாகப் பேசி நண்பர்களாக்குகிறார். இந்த வகையில் இடதுசாரித் தலைவர்கள் சிலரே டிடிவி-யின் நெருங்கிய நட்பு வட்டத்தில் வந்திருக்கிறார்கள்.

திருமாவளவன், வைகோ, திருநாவுக்கரசர் ஆகியோருக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையிலான நட்பு மிக ஆத்மார்த்தமானது. எனவே ஸ்டாலின் ‘பெரியண்ணன்’ மனபான்மையை காட்டும் தருணம் இதுவல்ல! ஜெயித்த பிறகு ‘தெம்பு’ காட்டும் ஜெயலலிதாயிஸத்தையாவது ஸ்டாலின் கற்றுக் கொள்ளவேண்டும்!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close