காவிரி மேலாண்மை வாரியம் : தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் மொத்த கோரிக்கை! காவிரி அணைகளை நிர்வகிக்க சுயேட்சையான அந்த அமைப்பு உருவானால்தான், தமிழ்நாட்டுக்கு உரிய நீர் கிடைக்கும். காவிரி நடுவர் மன்றம் அதற்கான உத்தரவை பிறப்பித்தது.

காவிரி வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம் அண்மையில் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் நடுவர் மன்ற உத்தரவை நிறைவேற்றக் கூறியிருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால் மத்திய நீர்வளத் துறையும், கர்நாடக அரசும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்கிற வார்த்தை இல்லை என கூறுகிறார்கள்.

காவிரி நீர் பங்கீடுக்காக ஒரு ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) உருவாக்கவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக மத்திய அரசும் கர்நாடக அரசும் கூறுகின்றன. தமிழக கட்சிகள் இந்தப் பிரச்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டன. ஆனால் அதில் நிறைவேற்றிய தீர்மானப்படி தமிழக பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் அனுமதி கொடுக்கவில்லை.

காவிரி பிரச்னையில் அடுத்தகட்டமாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நாளான இன்று (மார்ச் 15) மாலை 3.30 மணிக்கு சட்டமன்றம் கூடுவதாக சபாநாயகர் தனபால் இன்று திடீரென அறிவித்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் இன்று காலை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. காவிரி பிரச்னையை சுட்டிக்காட்டி, அந்தக் கூட்டத்தை திமுக கருப்பு உடை அணிந்து வந்து புறக்கணித்தது. அதன்பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடியது. அந்தக் கூட்டத்தின் முடிவில்தான் மாலை 3.30 மணிக்கு சட்டமன்றம் கூடும் என சபாநாயகர் தனபால் கூறினார்.

காவிரி பிரச்னைக்காக கூடுவதாக சபாநாயகர் அறிவிக்கவில்லை என்றாலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவே இந்த திடீர் கூட்டம் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19 தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் LIVE UPDATES

மாலை 4.05 : ‘காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான சட்டப் போராட்டத்தை நடத்தியுள்ளது’ என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறிப்பிட்டார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அத்துடன் இன்றைய அலுவல்கள் முடித்து வைக்கப்பட்டன.

மாலை 4.00 : ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும்’ என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மாலை 3.55 : மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசுகையில், ‘விவசாயிகள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அனைத்துக்கட்சித் தலைவர்களை பிரதமர் சந்திக்காதது ஜனநாயகத்தின் நெருக்கடியான தருணம். ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லி கொண்டிருப்பதற்கு இது நேரமல்ல. இதுவரை ஒதுக்கப்பட்ட அளவு நீரை எந்த ஆண்டும் கர்நாடகா வழங்கியதில்லை’ என குறிப்பிட்டார்.

மாலை 3.50 : முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை வாசிக்கையில், ‘காவிரி பிரச்னை டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுடன் பின்னிப் பிணைந்த பிரச்னையாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 6 வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என இந்த மன்றம் கேட்டுக்கொள்கிறது’ என குறிப்பிட்டு, ‘மாண்புமிகு உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்’ என்றார் முதல்வர்.

மாலை 3.45 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், இந்தப் பிரச்னையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.

மாலை 3.40 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தனித் தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும். திமுக எம்.எல்.ஏ.க்கள் அதற்கு தயாராக இருக்கிறோம்’ என கூறினார்.

மாலை 3.30 : சட்டமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாசித்தார்.

மாலை 3.25 : சட்டமன்ற சிறப்புக் கூட்டம் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. காலையில் கருப்புச் சட்டையுடன் பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், சிறப்புக் கூட்டத்திற்கும் கருப்புச் சட்டையுடன் கலந்து கொண்டனர்.

மாலை 3.00 : காவிரி பிரச்னையில் தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றவிருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு பேசினார். அப்போது, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதம் இல்லாமல் அமைக்க’ முதல்வர் கேட்டுக்கொண்டார்.

பிற்பகல் 2.50 : காலையில் திமுக.வுடன் இணைந்து வெளிநடப்பில் கலந்துகொண்ட காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் காவிரிக்கான சட்டமன்ற சிறப்பு அமர்வில் பங்கேற்க இருக்கிறார்கள்.

பிற்பகல் 2.45 : பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்கொள்வது குறித்து இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கூடி விவாதிக்க திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வு மாலையில் கூடுவதால், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக சட்டமன்ற வளாகத்திலேயே திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் உரிய அறிவுரைகளை வழங்கினார்.

பிற்பகல் 2.30 : காலையில் பட்ஜெட் வாசிப்பை புறக்கணித்த திமுக, பிற்பகலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற கூடுகிற சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close