காவிரி மேலாண்மை வாரியம் : கிடைத்த உத்தரவை நிறைவேற்ற 11 ஆண்டுகளாக போராடும் தமிழ்நாடு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கிடைத்த உத்தரவை நிறைவேற்ற 11 ஆண்டுகளாக போராடுகிறது தமிழ்நாடு! இன்னும் எத்தனை போராட்டங்கள் தேவைப்படுகிறதோ?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கிடைத்த உத்தரவை நிறைவேற்ற 11 ஆண்டுகளாக போராடுகிறது தமிழ்நாடு! இன்னும் எத்தனை போராட்டங்கள் தேவைப்படுகிறதோ?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது, கடந்த 2007-ம் ஆண்டே நடுவர் மன்றம் வழங்கிய திட்டவட்டமான உத்தரவு! காவிரி அணைகளை மேற்படி சுயமான ஒரு அமைப்பு நிர்வகித்தால்தான் சம்பந்தப்பட்ட 4 பாசன மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தண்ணீர் வினியோகம் செய்ய முடியும் என முடிவு செய்தே அந்த உத்தரவை நடுவர் மன்றம் வழங்கியது.

மேலாண்மை வாரியம் என்பது, புதிய கண்டுபிடிப்பு இல்லை. இந்தியாவிலேயே மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளை சமாளிக்க ஏற்கனவே சில மாநிலங்களில் அமுலில் இருக்கும் ஒரு நடைமுறைதான் அது! காவிரி நடுவர் மன்றம் சுமார் 17 ஆண்டுகள் விசாரணை நடத்தியே தனது இறுதி உத்தரவை 2007-ல் வழங்கியது. அந்த உத்தரவை அப்போதே மத்திய அரசு நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் காவிரி நடுவர் மன்ற உத்தரவை எதிர்த்து 4 மாநிலங்களும் நீதிமன்றத்தை நாடியதை சுட்டிக்காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டத்தை ஐ.மு.கூட்டணி அரசு கிடப்பில் போட்டது. ஒருவழியாக 2013-ம் ஆண்டு நடுவர் மன்ற இறுதி உத்தரவை உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் மன்மோகன் அரசு ‘கெசட்’டில் வெளியிட்டது.

காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவு கெசட்டில் வெளியானதுமே அது நிறைவேற்றியே ஆகவேண்டிய உத்தரவு என்கிற அந்தஸ்தை பெற்றுவிட்டது. ஆனால் அதன்பிறகும் ஐ.மு.கூட்டணி அரசும், 2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் அதை கண்டு கொள்ளவில்லை.

காவிரி விவகாரத்தின் முக்கிய திருப்பமாக 2017 அக்டோபர் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, 4 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. ‘நீதிமன்றம் உத்தரவிட்டால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம்’ என அதுவரை கூறிவந்த மத்திய அரசு, அந்த உத்தரவு வந்தவுடன் அப்படியே பல்டி அடித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. அந்த மனுவையும் விசாரித்து முடித்து மீண்டும் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை மட்டும் ஆண்டுக்கு 14 டி.எம்.சி. குறைத்து உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் மற்ற அம்சங்களில் காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை அமுல்படுத்தும் ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என தமிழ்நாடும், ‘இல்லையில்லை. அது பற்றி நாம் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்கிற நிலைப்பாடில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுகள் உள்ளன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் 6 வாரங்களில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றமும் நேற்று (மார்ச் 15) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. டெல்லியில் கடந்த 10 நாட்களாக அதிமுக எம்.பி.க்களும், சில நாட்கள் அவர்களுடன் இணைந்து திமுக எம்.பி.க்களும் போராடி வருகிறார்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியும் வருகிறார்கள்.

ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக தமிழக அரசு பிரதிநிதிகளையோ, அனைத்துக் கட்சியினரையோ சந்திக்க விரும்பவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை உரிய அவகாசத்தில் அமுல் செய்வோம் என்கிற வாக்குறுதியைக்கூட மத்திய அரசு சார்பில் இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை.

காவிரி பிரச்னை என்பது, 1970-களில் இருந்து தீவிரமான பிரச்னை! அதில் நடுவர் மன்றம் அமைக்கவே சுமார் 30 ஆண்டுகள் நீதிமன்றப் போராட்டத்தை தமிழக அரசும், விவசாய அமைப்புகளும் நடத்தியிருக்கின்றன. தமிழகத்தில் நடந்திருக்கும் மறியல், பந்த் போன்ற களப் போராட்டங்களுக்கு அளவே இல்லை.

அத்தனைக்கும் பிறகு நடுவர் மன்றம் அமைத்து, அந்த அமைப்பு 17 ஆண்டுகள் விசாரித்து வழங்கிய தீர்ப்பை அமுல் செய்ய 11 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம். தண்ணீருக்காக இன்னும் எத்தனை போராட்டங்களை தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதோ?!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close