scorecardresearch

வங்கி மூலம் கைமாறிய ரூ.12 லட்சம்.. நல்லாசிரியர் ராமச்சந்திரன் கைது பின்னணி

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் வரி ஏய்ப்பு புகாரில் சி.பி.ஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

Teacher Ramachandran suspended
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நல்லாசிரியர் ராமச்சந்திரன்

ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன் (38). இவருக்கு கடந்த ஆண்டு மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் இவர் ஒருவர் தான், அந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அரசுப் பள்ளிச் சீருடை அணிந்து ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் விருது பெற்றது அப்போது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

மோசடி

இந்நிலையில், இவரது சகோதரர் பஞ்சாட்சரம் Tax Information Network என்ற நிதி நிறுவனத்தை மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் Income Tax E file செய்யும் போது பலரது வருமானத்தை குறைவாக காண்பித்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த 2021-ம் ஆண்டு புகார்கள் வந்தன. அதன் பேரில் சி.பி.ஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்தாண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்தனர். பின்னர் அவர் பிணையில் வெளி வந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையில் பஞ்சாட்சரதத்தின் தம்பியும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான ராமச்சந்திரன் வங்கி கணக்கிற்கு பஞ்சாட்சரம் நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், ராமச்சந்திரனிடம் விசாரித்தனர். பின்னர் அவர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சி,பி.ஐ போலீசார் நேற்று மாலை (பிப்.24) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படியும், மீண்டும் வருகிற 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் மதுரை சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cbi arrests national level best teacher award recipient