
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஆந்திர எம்.எல்.ஏ. சுரேஷ் மற்றும் அவரது மனைவியும், சென்னை வருமான வரித்துறை ஆணையருமான விஜயலஷ்மி மீது சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் இந்திய ரயில்வேயில் பணியாற்றிய நிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். பின், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ.வானார். அதன்பின், கடந்த் 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது மனைவி விஜயலஷ்மி,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் தணிக்கைப் பிரிவு ஆணையராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வருமானத்துக்கு அதிகமாக 1.10 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது தெரியவந்தது. இது அவர்களுடைய வருமானத்தை விட 22.86 சதவீதம் அதிகம் என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஐதராபாத், நால்கொண்டா, மேற்கு கோதாவரி மாவட்டம், ரங்கா ரெட்டி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமாக உள்ள தங்க நகைகள், இரண்டு கார்கள் ஆகியவை வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சுரேஷ் மற்றும் அவரது மனைவி விஜயலஷ்மி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 மற்றும் பிரிவு 13(2), ஊழல் தடுப்பு சட்டம் 13(1)(e)ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
1994-ஆம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற விஜயலஷ்மி, சென்னைக்கு பணிமாற்றம் செய்வதற்கு முன்பு, ஐதராபாத், பெங்களூரு, கர்னூல், ராய்ச்சூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.