மிகப்பெரிய ஒப்பந்தங்களில் சட்டத்திற்கு புறம்பாக முறைகேடு செய்ததாக கூறி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மீதும், தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் சிலர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள துறைமுக அதிகாரிகள், தங்களது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி, நிர்வாக பங்குதாரர் பி.ஐ. ஜாம்பெர்ட் மதுரம் மற்றும் ஒப்பந்ததாரர் இம்மானுவேல் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.
அதாவது, 2014-16 ஆம் ஆண்டு காலகட்டங்களில், ரூ.13.04 கோடி மதிப்பிலான 'சவுத் பிரேக்வாட்டர் அப்ரோச் சாலை' திட்ட விரிவுப்படுத்துதல் மற்றும் வலிமைப்படுத்துதல் காண்ட்ராக்ட்டை, ஒப்பந்தம் கோரும் டெண்டர் தேதி முடிந்த பின்னரும், முறைகேடாக காண்ட்ராக்ட் விட்டுள்ளனர். இது தவிர, காண்ட்ராக் சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்காத போதிலும், கூடுதல் வேலைகளையும் அதே காண்ட்ராக்ட்காரர்களுக்கே ஒதுக்கியுள்ளனர்.
மேலும், தூத்துக்குடி வெப்ப மின் நிலைய ரவுண்டானாவில் இருந்து செல்லும் வஉசி துறைமுக சாலை திட்ட விரிவாக்க மற்றும் வலிமைப்படுத்துதல் காண்ட்ராக்ட்டை, இம்மானுவேல் & கோ ஒப்பந்ததாரர்களுக்கு முறைகேடாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணியையும் உரிய நேரத்தில் முடித்துக் கொடுக்காத நிலையில், மேலும் சில பணிகளை இவர்களுக்கே ஒதுக்கியுள்ளனர். இந்த திட்டங்களின் மதிப்பு ரூ.38.88 கோடியாகும்.
இந்த இரு வழக்குகளிலும், துறைமுக அதிகாரிகள், பணிகள் தாமதமானதற்கான பாதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பவில்லை. இதன்மூலம், ஒப்பந்ததாரர்களுக்கு துறைமுக அதிகாரிகள் துணை போயிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மூன்றாவதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. துறைமுக வளாகத்தில் டிரக் பார்க்கிங் முனையம் அமைப்பதில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.26.31 கோடி. இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சாகர் மலா திட்டம் மூலம் டிரக் பார்க்கிங் முனையம் கட்டமைக்க டெண்டர் கோரப்பட்டது.
இதன் மூலம், கரையோர பொருளாதார மண்டலங்களில் வாழும் மக்களுக்கு நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் திறமையான வேலைவாய்ப்பு உருவாக்குவதே மத்திய நிதியத்தின் நோக்கமாக இருந்தது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், இத்திட்டத்திற்கு 30% நிதி ஒதுக்கி பங்குதாரர்களாக செயல்பட்டனர். ஆனால், அதன்பின் எந்தவித முறையான காரணமும் இன்றி தங்களது பங்களிப்பை நீட்டிக்காமல் அவர்கள் விலகிக் கொண்டனர். இத்திட்டத்திற்காக இரண்டு நிறுவனங்களும் ₹ 32.99 கோடி மற்றும் ₹ 36.89 கோடி ரூபாய் பங்களித்தன. ஆனால், இதனை வஉசி துறைமுகம் ஏற்றுக் கொள்ளாமல், புதிய டெண்டர் விட்டது.
இந்த மறு டெண்டரில், இம்மானுவேல் & கோ ரூ.23.69 கோடி கோரியதால், டெண்டர் இவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ கூறுகையில், இந்த டெண்டரில் வேறு எந்த நிறுவனங்களும் பங்குபெறவில்லை. இதன்மூலம், துறைமுக அதிகாரிகளின் உதவியோடு மற்ற ஒப்பந்ததாரர்களை பங்குபெறாமல் தடுத்து, துறைமுகத்தின் டெண்டரை முறைகேடாக இம்மானுவேல் & கோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று தெரிவித்துள்ளது.