பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, தொழிலதிபர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள், அவர்களுக்கு எப்படி கிடைத்தன என்பதை கண்டறிய முடியாமல் சிபிஐ போலீஸார் திணறி வருகின்றனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, அப்போது புழக்கத்திலிருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதையடுத்து, புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. அப்போது, பணம் அச்சிடும் அரசு அச்சகங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து, நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள பணக்கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் முறைகேடாக பதுக்கி வைக்கப்படுவதாக நாடு முழுவதும் பல புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பல அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி, தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவருடைய எச்.ஆர்.எஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தியதில், ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட்யு வருகின்றனர். அதனடிப்படையில், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், நாடு முழுவதும் மக்கள் 2,000 ரூபாய் நோட்டுக்காக அலைந்துகொண்டிருக்கும் நிலையில், இவருக்கு எப்படி இவ்வளவு பெரும் தொகை அந்த காலகட்டத்தில் கிடைத்தது என்பதை கண்டறிய முடியாமல் சிபிஐ அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
பாதுகாப்பான அரசு அச்சகங்களில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் குறிக்கப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படும். அங்கிருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பண கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு வங்கிகளுக்கு அனுப்பப்படும். இந்நிலையில், வங்கிகளுக்கு விநியோகம் செய்வதற்காக பல்வேறு பணக்கிடங்களுக்கு அனுப்பப்பட்ட ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை ரிசர்வ் வங்கி குறித்து வைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, ’தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டதாவது, சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் எப்படி வந்திருக்க வேண்டும் என சிபிஐ கேட்ட கேள்விக்கு, இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மேற்கொண்டு தகவல்களை சேகரிக்க முடியாமல் சிபிஐ அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.