நிலவேம்பு குடிநீர் விவகாரத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கமல்ஹாசன், நிலவேம்பு குடிநீர் விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு கடந்த 18ஆம் தேதி தன்னுடைய இயக்கத்தினரிடம் கூறினார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்ட கமல்ஹாசன், “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக் கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்.
ஆராய்ச்சியை அலோபதியர்தான் செய்ய வேண்டுமென்றில்லை. பாரம்பரியக் காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்க விளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்” என கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்தக் கூற்றுக்கு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தேவராஜன் என்பவர் கமல்ஹாசனை கைதுசெய்யக் கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அத்துடன், தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ சங்கத்தினரும் கண்டனம் தெரிவித்தனர்.
கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தன் ட்வீட்டுக்கு விளக்கம் அளித்தார் கமல்ஹாசன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டதை, நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று சிலர் செய்தியாய் பரப்புவது எந்த வகையிலும் நியாயமில்லை.
ஆர்வக் கோளாறில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல், மருந்துகளை என் இயக்கத்தான் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு, வைத்தியர்கள் உதவியுடன் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த உதவியோ, அறிவுரையோ இல்லாமல், மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன்.
மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றால், அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால், மருத்துவ அறிவுரை இல்லாமல், ஆர்வம் மட்டுமே ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்திவைக்கச் சொல்லியிருக்கிறேன். சித்தா, அலோபதி என்ற தனிசார்பு எனக்கில்லை.
அதுவரை டெங்குவை எப்படி கட்டுப்படுத்துவது? என்றால், பக்கத்து மாநிலமான கேரளத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம். இத்தனை நாள் ஈ ஓட்டாமல், கொசுவை விரட்டியிருக்கலாம்” என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
இந்நிலையில், தேவராஜன் அளித்த புகார் மீதான வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. ‘கமல்ஹாசன் கூறியதில் முகாந்திரம் இருந்தால், அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம்’ என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றமே அனுமதி கொடுத்துவிட்டதால், கமல்ஹாசன் மீது வழக்குப் பதிய காவல்துறையினர் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த காவல் துறையினர் இதற்காக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கமல்ஹாசன் தொடர்ந்து சுமத்தி வருவதால், அவரைச் சிக்க வைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என காவல்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Ccb branch police consulting with advocates for case file against kamal haasan
பட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி!
கொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை
எல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை