இன்று சட்டசபையில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக எம்எல்ஏ கே.என்.நேரு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெருந்துறை ஆகிய இடங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து இடங்களில் மத்திய அரசு எதைத் தேர்வு செய்தாலும் தமிழக அரசு வரவேற்கும்" என்றார்.
தொடர்ந்து இந்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. முன்னதாக, எய்ம்ஸ் அமைக்க தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் சாதகமான சூழல் இருந்ததால், அதனை பரிந்துரை செய்தோம். ஆனால், அதனை மத்திய குழு நிராகரித்துவிட்டது . அதற்கு பின் இந்த ஐந்து இடங்களை பரிந்துரை செய்துள்ளோம்" என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ வேண்டுமெனில், 200 ஏக்கர் நிலம், ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட சில நிபந்தனைகளை மத்திய அரசு கோரியிருந்தது. இவையனைத்தும் தஞ்சையில் இருந்தும், அங்கு எய்ம்ஸ் அமைக்க மத்தியக் குழு மறுத்துள்ளது. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சையில் அமைய சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது.