தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் குறித்து தன்னால் சட்ட ஆலோசனை வழங்க இயலாது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் உச்ச நீதிமன்றதில் பதிலளித்துள்ளார்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கிடையே அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்ட ஆளுநர், 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். அதன்படி, பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக சட்டப்பேரவை கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதியன்று கூடியது.
அப்போது, ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்திய திமுக-வினர், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனையடுத்து, அவையில் இருந்து திமுக-வினர் வெளியேற்றப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் உச்ச நீதிமன்றதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை சபாநாயகர் நிராகரித்தது தவறான நடவடிக்கை. ஜனநாயக நடைமுறைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இந்த நம்பிக்கை தீர்மானத்தை செல்லாதது என அறிவிக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடம் உள்ளதா என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகி சட்ட ஆலோசனை வழங்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கேகே.வேணுகோபால், தாம் ஏற்கனவே பன்னீர்செல்வம் அணியினருக்கு சட்ட ஆலோசனை அளித்து வருவதாகவும், அதனால், நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்க இயலாத நிலையில் தான் இருப்பதாகவும் பதிலளித்துளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.