அ.தி.மு.க.வை பல கூறுகளாக்கிவிட்டது மத்திய அரசு : எஸ்.டி.பி.ஐ. விமர்சனம்

அ.தி.மு.க.வை பல கூறுகளாக மத்திய அரசு உடைத்துவிட்டதாக விமர்சனம் வைத்திருக்கிறது எஸ்.டி.பி.ஐ.!

அ.தி.மு.க.வை பல கூறுகளாக மத்திய அரசு உடைத்துவிட்டதாக விமர்சனம் வைத்திருக்கிறது எஸ்.டி.பி.ஐ.!
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா, பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஜூலை 21 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பா.ஜ.க. எதிர்ப்பணித் தலைவர்களின் சங்கம நிகழ்ச்சியாக இந்த மேடை அமைந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் விருது கொடிக்கால் சேக் அப்துல்லாவுக்கும், தந்தை பெரியார் விருது பேரா. அ. மார்க்ஸ்-க்கும், காமராஜர் விருது பிரின்ஸ் கஜேந்திர பாபுவுக்கும், காயிதே மில்லத் விருது கேப்டன் அமீர் அலிக்கும், நம்மாழ்வார் விருது சுப.உதயகுமாரனுக்கும், அன்னை தெரசா விருது மறைந்த எஸ்.எம்.ஏ ஜின்னாவுக்கும், கவிக்கோ விருது சிலம்பொலி செல்லப்பனாருக்கும் வழங்கப்பட்டன.
மேலும் சமூக அக்கறை உள்ள கலைப்பணிக்காக இயக்குநர் கரு. பழனியப்பன், பாடகர் சமர்ப்பா.குமரன், சிறப்பாக பணியாற்றியமைக்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி, ஓய்வு பெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் காந்தி, சிறந்த ஊடகப் பணிக்காக தீக்கதிர் ஆசிரியர் குமரேசன், ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, நீதிக்கான பணிக்காக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அப்துல் முபீன், சாதனை புரிந்த மாணவர்கள் இளம் விஞ்ஞானி பள்ளப்பட்டி முகம்மது ரிஃபாத், உலக சாதனையாளர் மொழிப்பிரியன் மஹ்மூத் அக்ரம் மற்றும் சமூக அக்கறை கொண்ட தொழிலதிபர்கள் நோபல் குழுமம் சேர்மன் அப்துல் பாரி, சென்னை ஒயிட் ஹவுஸ் சேர்மன் சாகுல் ஹமீது ஆகியோருக்கு பட்டயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.டி.பி.ஐ. மாநிலத்தலைவர் தெகலான் பாகவி, ‘இன்றைக்கு தமிழக அரசியல் மிகமுக்கிய காலகட்டத்தை அடைந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவை பல கூறுகளாக்கி தங்களை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு உருவாக்கியிருக்கிறது.
நீட் தேர்வு விவகாரம், தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய இழப்பீடுகளை வழங்குவதில் தாமதம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் கர்நாடகத்துக்கு ஆதரவான போக்கு என தமிழகத்திற்கு எதிரான போக்குகளை மத்தியில் ஆளும் பாஜக மேற்கொண்டுவருகிறது. இதனை எதிர்க்க துணிவில்லாத நிலையில் மாநில அரசு இருந்து கொண்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியால் இந்திய துணைக் கண்டத்துக்கு மிகப்பெரும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் சட்டத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, கல்வியை, அதிகார வர்க்கத்தை, இவற்றையெல்லாம் மாற்றி ஒற்றை கலாச்சாரமுள்ள ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சட்டம், ஒரு தேர்தல், ஒரு மொழி என குறுகிய பார்வையுள்ள இந்தியாவாக, குறுகிய சித்தாந்தம் உள்ள இந்தியாவாக நமது தேசத்தை உருவாக்க பாஜக முயற்சித்துவருகிறது.
நாட்டில் மாடுகளின் பெயரால் ஏற்பட்டுள்ள வன்முறையினால் 35 க்கும் அதிகமான முஸ்லிம்கள் சில மாதங்களில் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்கள். பாபரி பள்ளி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. நியாயம் கிடைக்கவில்லை. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டும் முயற்சியை பாரதீய ஜனதா கட்சி முன்னெடுத்து வருகிறது.
இந்த பேரபாய காலக் கட்டத்தில் தான் இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை, இறையாண்மையை, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிற குடியரசு தலைவர், துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவர்கள் பதவியேற்கிற பேரபாயம் இன்று ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அவர்கள் கையில், கவர்னர் மாளிகை அவர்கள் கையில், இப்போது ஜனாதிபதி மாளிகையும் அவர்களது கைகளில் என்கிற நிலை நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து. இதன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகம், மதசார்பற்ற தன்மை, இறையாண்மை ஆகியவற்றிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதனையெல்லாம் எதிர்த்து போராடுவதற்கு அனைவரும் தயாராக வேண்டும். இஸ்லாமிய சமுதாயம் தயாராக வேண்டும். சிறுபான்மை மக்கள் தயாராகிட வேண்டும். இந்துக்கள் தயாராகிட வேண்டும்.
விடுதலைப் போரில் மன மாச்சர்யங்களை கடந்து எவ்வாறு ஒருங்கிணைந்து போரிட்டோமோ அது போல் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, தலித், சீக்கிய மற்றும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இந்த களத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி உறுதியாய் இருக்கும். எதற்கும் அச்சப்படாமல், கவலைப்படாமல், எந்த விலை கொடுக்கவும் தயாராய், எந்த தியாகத்துக்கும் தயாராய் ஃபாசிச பயங்கரவாதத்தை வேரறுப்போம் என்கிற உறுதியோடு எஸ்.டி.பி.ஐ கட்சி களம் காணும்.
இந்த காலச்சூழலை உணர்ந்து சமுதாய அமைப்புகள், சமூக அமைப்புகள், மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.’ இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், சென்னை மயிலை மறை மாவட்ட முன்னாள் பேராயர் டாக்டர். சின்னப்பா, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் முதன்மை துணைத்தலைவர் அப்துல் ரஹ்மான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூன், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனீஃபா, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் இனிக்கோ இருதயராஜ், இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் நிஜாமுதீன், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது, இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத்தலைவர் முஹம்மது முனீர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இறுதியாக எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் அமீர் ஹம்சா நன்றி கூறினார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close