தமிழகம், பெங்களூர் என சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டே இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பது தெளிவாக தெரிகிறது. அடையாற்றில் உள்ள எனது வீட்டில் சோதனை நடைபெறவில்லை. அடையாறில் உள்ள வீட்டிற்கு ஒரேயொரு அதிகாரி தான் வந்தார். அப்போது நாங்கள் 'கோ' பூஜையில் இருந்தோம். சிறிது நேரம் வெயிட் பண்ணும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், வந்த அதிகாரி திரும்பிச் சென்றுவிட்டார். மீண்டும் வந்தாலும் வரலாம். புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள பண்ணை வீட்டில் தான் சோதனை நடைபெற்று வருகிறது.
எனது பண்ணை வீட்டில் மாட்டுச் சாணங்கள் தான் இருக்கும். வேறு எதுவும் இருக்காது. அங்கு படிப்பறிவு இல்லாதவர்கள் தான் வேலை செய்து வருகின்றனர். இதனால், பண்ணை வீட்டில் அதிகாரிகள் அவர்களாகவே எதையாவது வைத்துவிட்டு எடுக்கக் கூடாது. எங்களை மிரட்டிப் பார்ப்பதற்காகவே இந்த வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையை நாங்கள் விமர்சித்த நிலையில், பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வி.கே. சசிகலாவும், நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காகவே வருமான வரிசோதனை நடைபெறுகிறது. அந்தச் சோதனைக்கு பின்னணியில் உள்ள கட்சியை தமிழகத்தில் காலூன்ற விட மாட்டோம்.
மன்னார்குடியில் யாரும் இல்லாத வீட்டில் வருமான வரிசோதனை நடைபெறுகிறது. ஜெயா டிவியில் நடக்கும் வருமான வரி சோதனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம். ஜெ.ஜெ. டிவியை முடக்கியது போல் ஜெயா டிவியை முடக்க முயற்சி நடக்கிறது. யாரையோ காப்பாற்றும் முயற்சியாகக்கூட இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம்.
33 ஆண்டுகளாக இது போன்ற சோதனைகளை சந்தித்து வருகிறோம். சிறுவயதில் இருந்தே சோதனைகளையும், சிறைகளையும் பார்த்துவிட்டோம். இந்த பூச்சாண்டி வேலைக்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். தமிழகத்தில் உள்ள சிறைகளைத் தாண்டி திகார் வரை சென்று வந்துவிட்டோம். என்ன செய்துவிட முடியும் இவர்களால்? மிஞ்சிப் போனால், 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளிப்பார்கள். அப்படி சிறையில் அடைத்தாலும் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடுவேன்" என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.