Nilgiri Mountain Railway for monetization : இந்தியாவின் ஒரே ஒரு ராக் மற்றும் பினியன் என்ற பல்முனை சக்கரங்களில் இயங்கும் ரயில், சுவிஸ் எக்ஸ் க்ளாஸ் நிலக்கரி எஞ்சினால் இயக்கப்பட்ட ஒரே ரயில் என்று பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது நீலகிரி மலை ரயில். சுற்றுலா விரும்பிகள் இதில் பயணிக்க 6 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்களை முன்பதிவு செய்துவிட்டு காத்திருப்பார்கள். பலருக்கும் இதில் பயணம் செய்வது ஒரு நீண்டகால கனவுகளில் ஒன்றாக இருக்கும். ஆனால் சமீபத்திய மத்திய அரசின் அறிவிப்பு, சாமானியர்களுக்கான மலை ரயில் சேவையை கேள்விக்கு ஆளாக்கியுள்ளது.
தனியார்மயமாகிறதா நீலகிரி மலை ரயில் சேவை?
பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையாக பல்வேறு அரசு பங்குகளைக் கொண்டுள்ள நிறுவனங்களின் சொத்துகளை இந்திய அரசு கடந்த சில வருடங்களாக தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நிதி ஆயோக் வெளியிட்டிருந்த பட்டியலில் 492 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில், சென்னை விமான நிலையம் உட்பட 6 விமான நிலையங்கள், தூத்துக்குடி துறைமுகம் ஆகிய தமிழகத்தில் இருக்கும் பொது சொத்துகளை தனியார்மயமாக்கல் திட்டத்தின் கீழ் இடம் பெற்றிருந்தது.
இந்தியாவின் மலை ரயில்கள், இந்தியாவில் இருக்கும் மலைப்பாங்கான பகுதிகளிலும் மலைகளிலும் முழுமையாக செயல்படும் ரயில்வே நெட்வொர்க்குகளை கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில், இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே, தமிழகத்தின் நீலகிரி மலைகளில் அமைந்திருக்கும் நீலகிரி மவுண்டெய்ன் ரயில்வே, இமாச்சல் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கல்கா சிம்லா ரயில்வே மற்றும் மகாராஷ்ட்ராவில் அமைந்திருக்கும் மத்தேரன் ரயில்வே ஆகியவை மிக முக்கியமான ரயில்வே சொத்துகள் ஆகும். இந்த இடங்கள் உள்நாட்டு சுற்றுலா மையங்கள், இந்த ரயில்வேயின் பாரம்பரிய அடிப்படையிலான முறையீடு கொண்டவை என்று நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
OMD அடிப்படையிலான PPP (Public-private partnership) மாதிரி மூலம் மலை ரயில்வே பணமாக்கப்படலாம். ஏன் என்றால் உள்கட்டமைப்புக்கு முதலீடு தேவைப்படும். ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள ரயில் நிலையத்திற்கு சொந்தமான நிலத்தில் நம்பகத்தன்மை மிக்க வணிக ரீதியான செயல்பாடுகளும் மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.
30 முதல் 50 ஆண்டுகள் வரை சலுகை காலத்தை செலவிட முடியும் என்பதைக் காட்டுகிறது நிதி ஆயோக் வெளியிட்டிருக்கும் ஸ்னாப்சாட் குறியீட்டு அமைப்பு. சலுகையாளரால் பாதுகாக்கப்பட வேண்டிய திட்ட சொத்துக்கள் மற்றும் அழகியலின் பாரம்பரிய தன்மை மற்றும் எந்த வளர்ச்சியும், சலுகை ஒப்பந்தத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயிலின் வரலாறு என்ன?
மதராஸ் மாகாணாத்தின் கோடைகால தலைநகராக விளங்கிய நீலகிரியில் 1820களில் ஆங்கிலேயர்கள் முதன்முறையாக குடியேற துவங்கினார்கள். சென்னையில் இருந்து கோவை வரை நீட்டிக்கப்பட்ட ரயில்வே பாதை , ஆங்கிலேயர்களின் பயணத்திற்காக நீலகிரி வரை நீட்டிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1800களின் மத்திய பகுதியில் இந்த ரயில் சேவை துவங்குவதற்காக திட்டம் முன்மொழிவு செய்யப்பட்டாலும், 45 ஆண்டுகள் கழித்து ரயில் பாதை கட்டிமுடிக்கப்பட்டது. ஜெர்மனியின் ஹார்ஸ் மலைத்தொடர்களில் இயக்கப்படும் ஏ.பி.டி. சிஸ்டம் போன்று இங்கே மலை ரயில் பாதை அமைக்கலாம் என்ற ஆலோசனையை வழங்கினார் சிலோன் ரயில்வேயில் பணியாற்றிய மூத்த பொறியாளார் சர் கில்ட்ஃபோர்ட் மோல்ஸ்வொர்த். 1882ம் ஆண்டு ரிகி ராக் ரயில்வே பாதையை கண்டுபிடித்த எம். ரிக்கன்பெக் நீலகிரி மலை ரயில் திட்டத்திற்கான முன்மொழிவை சமர்பித்து நீலகிரி மலை ரயில் பாதை கட்டிமுடிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் மட்டுமே இருப்புப் பாதை போடப்பட்டது. பிறகு வெலிங்டன், அவரங்காடு, கேத்தி, லவ்டேல், ஃபெர்ன்ஹில் மற்றும் உதகை என மலை ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. முதல்முறையாக ஜூன் 15, 1899ம் ஆண்டு தன்னுடைய பயணத்தை துவங்கியது இந்த மலை ரயில் சேவை. பிறகு 1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று உதகை வரையிலான வழக்கமான போக்குவரத்தை இந்த மலை ரயில் சேவை துவங்கியது.
காலை 07:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் ஆரம்பமாகும் இந்த மலை ரயில் பயணம் நீராவி எஞ்சின் மூலம் இயக்கப்பட்டு, குன்னூரில் டீசல் எஞ்ஜினுக்கு மாற்றப்படும். நூறாண்டுகள் கடந்தும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வரலாற்றை அழகாக நினைவு கூறும் சின்னமாக அமைந்திருக்கிறது நீலகிரி மலை ரயில். 2005ம் ஆண்டு இந்த மலை ரயில்ப் பாதையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
டிஎன் 43-ம் பொதுமக்களின் எதிர்ப்பும்
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் நீலகிரி மலை ரயில் டி.என்.43 என்ற தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. அந்த நிறுவனம் நீலகிரி மலை ரயிலின் முகப்பை காவி நிறத்தால் வண்ணம் அடித்து, பணிப் பெண்களை நியமித்து, ஒரு முறை பயணத்திற்கான கட்டணமாக ரூ. 3000-த்தை வசூல் செய்தது. இதற்கு பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ரயில்வே சங்கங்கத்தினர் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தனர். பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே தனியாருக்கு / தனிநபர்களுக்கு சார்ட்டர் ரயில் விடுவது வழக்கமான ஒன்றாக தான் இருக்கிறது. ரயிலை மட்டும் தான் தனியாருக்கு கொடுத்தோம். மலை ரயில் பாதையை இல்லை என்று சேலம் கோட்டம் விளக்கம் அளித்தது.
முதல்வர் எதிர்ப்பு
தேசிய பணமயாக்கல் கொள்கை என்ற பெயரில் என்ற பெயரில் விலைமதிப்பற்ற பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும்; இத்தகைய பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வலியுறுத்தியும் பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை செப்டம்பர் 3ம் தேதி அன்று எழுதினார்.
நம் நாட்டினருடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். அவற்றில் பலவும் இந்தியாவை தொழில்மயமான தற்சார்புடைய நாடாக நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்கு சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதனால் அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த பணமாக்கல் என்னும் நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள் மீதும் இந்நிறுவனங்களை சார்ந்து இயங்கும் சிறுகுறு தொழில்துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பொதுமக்களின் கருத்து என்ன?
தனியார்மயமாக்கல் என்பது அவ்வளவு மோசமான ஒன்றாக இருக்காது என்று தான் நான் நினைக்கின்றேன். அதிகபட்சமாக ஒரு நபர் பயணம் செய்ய வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே அதிகமாகும். ஆனால், சுகாதாரமான, சுத்தமான ரயில் நிலையங்கள், பாதுகாப்பான பயணம், மிகவும் மகிழ்ச்சியாக பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் பணியாளார்கள் ஆகியோர் கிடைப்பார்கள். இது போன்ற சேவை கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக தனியார்மயமாக்கல் நல்லது என்று தான் கூறுவேன் என்று கூறினார் சந்தோஷ். விசாகப்பட்டினத்தை சேர்ந்த அவர் தன்னுடைய மனைவியுடன் முதன்முறையாக நீலகிரி மலை ரயிலில் பயணம் மேற்கொண்டார். அவரிடம் அரசின் பங்கு இதில் எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய போது, அரசு மொத்தமாக அனைத்து நிர்வாக பொறுப்புகளையும் தனியாரிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. மாறாக ரயில்வேயின் மேற்பார்வையை மத்திய அரசே தொடர வேண்டும் என்று கூறினார்.
இந்த நீலகிரி மலை ரயில்வேயில் தமிழகத்தை சேர்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. தனியார்மயமாக்கல் மூலமாக தமிழக பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நான் அதனை நிச்சயமாக வரவேற்ப்பேன் என்று கேத்தி பள்ளத்தாக்கில் வசித்து வரும் கௌதம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
”ஹில்க்ரோவ் ரயில் நிலையத்தில் ஒரு தேநீர் கடையை அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதிகாலையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு ரயில் ஏறும் நபர்களுக்கு சிறப்பான காலை சிற்றுண்டி கிடைப்பது கேள்விக்குறியான ஒன்றாகும். பலரும் அந்த தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்த விரும்ப மாட்டார்கள். ஏன் என்றால் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களின் விலையும் சமானிய மனிதர்களால் வாங்க முடியாத அளவிற்கு இருந்தது. சிறிது காலம் கழித்து, அந்த தேநீர் கடையை நடத்த முடியவில்லை என்று கடையை மூடிவிட்டார்கள். இது தான் நிலவரம். தேநீர் கடைக்கே இது தான் நிலைமை என்றால் மொத்த ரயில்வேயையும் தனியாருக்கு கொடுத்துவிட்டால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள்” என்று கூறுகிறார் நடராஜன்.
ஹெரிட்டேஜ் ஸ்டீம் சேரியட் அறக்கட்டளையின் அறங்காவலராக செயல்படும் நடராஜன், நீலகிரி மலை ரயிலை தனியார்மயமாக்கமல் லாபத்துடன் நடத்துவது எப்படி என்பது தொடர்பாக தொடர்ந்து ரயில்வே அமைச்சகத்துடன் பேசி வருகிறார்.
“தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது கூட லாபம் தான். இங்கே பல இடங்களில் கிராம சுற்றுலாக்களை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளலாம். கேத்தி, ரன்னிமேடு போன்ற பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கலாம். திருமண நாட்கள், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ரயில் பெட்டிகளை வாடகைக்கு எடுக்கும் வசதியை பொதுமக்களுக்கு தரலாம். மேலும் இந்த ரயில் நிலையங்களை ஒட்டி பிரம்மாண்டமாக ஒரு காலத்தில் நின்று கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் கால கட்டிடங்கள் தற்போது புதர்மண்டி கிடக்கிறது. அதனை பொதுமக்களுக்கு குறைந்த வாடகையில் தங்க ஏற்பாடு செய்யலாம். இது சுற்றுலாத்துறையையும் வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்லும்” என்று கூறினார்.
ரயில்வே மட்டும் லாபகரமாக செயல்பட்டால் போதுமா, அதை நம்பி இங்கே ஆயிர கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், மற்றும் உணவக உரிமையாளர்கள் உள்ளனர். தனியார் நிறுவனம், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தால், இந்த பாரம்பரிய ரயிலில் பயணிக்க வரும் சாமானிய மக்களின் வருகையை நிச்சயமாக நீலகிரி மாவட்டம் இழந்துவிடும். இது போன்ற பல சாதக பாதகங்களை பட்டியலிட்டு அதற்கு ஏற்ற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருக்க வேண்டும் அரசு. மக்களிடம் கருத்துகளையே கேட்கவில்லை என்றும் தெரிவித்தார் நடராஜன். ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்தது நீலகிரி மலை ரயில். சாமன்ய மக்களின் பயன்பாடு என்பது அன்றைய காலகட்டத்தில் கேள்விக்குறியாக இருந்தது. இன்று தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டால் அதே நிலைமை தான் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நீலகிரி மலை ரயில் சேவை பணமாக்கல் பட்டியலின் கீழ் கொண்டு வர முன்மொழிவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இது ஆரம்ப கட்டங்களில் இருப்பதால், இது தொடர்பாக எந்த விதமான கருத்துகளையும் கூற முடியாது” என்று தென்னக ரயில்வேயின் பொதுத் தொடர்பு அலுவலகம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.