அதிமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்காது: வெங்கையா நாயுடு திட்டவட்டம்

அதிமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்காது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்காது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். இதனையடுத்து, அதிமுக இரண்டாக பிளவு கண்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அம்மா அணி என்றும் செயல்பட்டு வருகிறது.

இரு அணிகளாக இருக்கும் அதிமுக-வின் இந்த அணிகளை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கருத்து ஒற்றுமை ஏற்படாததால் இந்த இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.

இது ஒருபுறமிருக்க, பெரும்பாலான எம்.எல்.ஏ.,-க்கள், எம்.பி.,-க்கள் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அம்மா அணியில் சிலர், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் களமிறங்கும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கப்படும் என இரு அணியினரும் அறிவித்துள்ளனர். அதேபோல், ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கப்படும் என டிடிவி தினகரனும் அறிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின், அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு விடும் என வதந்தி கிளம்பியது. மேலும், இந்த ஆட்சி தானாகவே கலைந்து விடும் நாங்கள் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ளார்.

இந்நிலையில், அதிமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்காது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடுவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், அதிமுக ஆட்சியை மத்திய அரசு கலைத்து விடும் என்பது முற்றிலும் வதந்தியே. மத்திய பாஜக ஆட்சி, தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியை ஒரு போதும் கலைக்காது. மாநில அரசை கலைக்க வகை செய்யும் 365 பிரிவை மத்திய அரசு ஒரு போதும் தவறாக பயன்படுத்தாது. அதிமுக ஆட்சி நான்கு ஆண்டுகள் நீடிப்பது குறித்து அக்கட்சி எம்எல்ஏ-க்களே முடிவு செய்வர் என்றார்.

×Close
×Close