காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயலும் கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு துணைபோகக் கூடாது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட செய்தி அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட ரூ.5,912 கோடி ஒதுக்கீடு செய்து, அதற்கான முழு விவரங்கள் அடங்கிய திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறையின் அனுமதிக்காக ஜூன் 7-ஆம் தேதி அளித்து தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேகதாட்டு, ராசிமணலில் கட்டப்படும் தடுப்பு அணைகள் மூலம் 67.14 டி.எம்.சி. நீரை தேக்கி வைத்துக்கொள்ளவும், 400 மெகாவாட் நீர் மின்சார உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தவும் கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், 16.1 டி.எம்.சி. நீரை பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் அம்மாநில அரசு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அப்பகுதிகளில் தடுப்பணைகள் கட்டினால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் 12 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் தரிசாகிவிடும் ஆபத்து உள்ளது எனவும் வைகோ தம் அறிக்கையில் குறிப்பிட்டார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அலட்சியப்படுத்தும் வகையிலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வரும் கர்நாடகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு துணைபோவது மட்டுமின்றி, இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை என்று மனுத்தாக்கல் செய்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக இருக்கிறது என வைகோ தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகளை அமைக்காமல், மத்திய அரசு தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் இழைத்து வருவதாக குறிப்பிட்ட வைகோ, மேகதாட்டு, ராசிமணலில் தடுப்பணைகள் அமைக்க மத்திய அரசு நீர்வளத்துறை ஆணையம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதியை அளிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.