தமிழகத்தில் டெங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய அரசின் மருத்துவ குழுவினர், இன்று சேலம் மற்றும் செங்கல்பட்டில் ஆய்வு நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் அடங்கிய மத்திய அரசின் மருத்துவ குழுவினர் வெள்ளிக்கிழமை சென்னை வந்தனர்.
முதலாவதாக, சுகாதார துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில், சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, தமிழக அரசுக்கு ரூ.256 கோடி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், செய்தியாளர்களை சந்தித்த மத்திய குழுவை சேர்ந்த அசுதோஷ் பிஸ்வாஸ் கூறுகையில், “டெங்கு தடுப்பு, சிகிச்சையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், சில அம்சங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். கொசுவை ஒழிக்க அரசு மட்டுமல்லாமல், பொதுமக்களும் முன்வர வேண்டும். சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்து புழங்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். நோய் தீவிரமடையும் வரை அலட்சியமாக் இருக்கக் கூடாது. தமாதமாக மருத்துவமனைக்கு செல்வது, சிகிச்சை எடுக்காமல் இருப்பது, தனியார் மருத்துவமனைகள் தாமதமாக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பது போன்றவைதான் உயிரிழப்புக்கு காரண”, என கூறினார்.
மேலும், ”நிலவேம்பு குடிநீரின் மருத்துவ குணம் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சிலருக்கு, அது பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், முறையாக அங்கீகரிக்கப்படாத எந்த மருந்தையும் நாங்கள் பரிந்துரைப்பதில்லை”, எனவும் கூறினார்.
ஆய்வுக்கூட்டத்தை தொடர்ந்து, சென்னை அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள், குழந்தைகளின் குறைகளை கேட்டறிந்தனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து, அக்குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து, அதில் ஒரு குழுவினர் வளசரவாக்கம் பகுதியிலும், மற்றொரு குழுவினர் போரூர் தனியார் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இன்று (சனிக்கிழமை) சேலம் மற்றும் செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.