கல்விக்கடனுக்காக விண்ணப்பம் செய்த தகுதியுடைய மாணவர்கள் அனைவருக்கும் விரைவாகக் கல்விக்கடன் வழங்கும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு வாரி வழங்கினாலும் அதிகாரிகள் பறித்துக் கொள்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் காட்டும் அலட்சியம் தான். தகுதியுள்ள மாணவர்களுக்குக் கூட கல்விக் கடன் வழங்க பொதுத்துறை வங்கிகள் மறுப்பதால், உயர்கல்வி கற்கும் மாணவர்கள் பலர் தங்களின் படிப்பை முடிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி கற்கின்றனர். இதற்குக் காரணம் தமிழகத்தில் அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவது தான். தமிழக மாணவர்களிடையே உயர்கல்வி கற்பதற்கான ஆர்வமும், தகுதியும் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான மாணவர்களின் பொருளாதார நிலை தான் அவர்களின் உயர்கல்வி கனவுகளுக்கு பெரும் தடையாக உள்ளது.
மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவேற்றுவதற்காக கல்விக்கடன் திட்டம் தொடங்கப்பட்ட போதிலும், அது எதிர்பார்த்த பலனில் பாதியைக் கூட இன்னும் தரவில்லை. இதற்கு காரணம் வங்கி நிர்வாகங்களின் அலட்சியம் தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கல்விக்கடன் வழங்குவதில் உள்ள சிக்கல்களை கலைய வேண்டும் என்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு வித்யாலட்சுமி இணையம் என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகள், 7 தனியார் வங்கிகள், 3 கூட்டுறவு வங்கிகள், ஒரு மண்டல ஊரக வங்கி என மொத்தம் 38 வங்கிகள் இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்பித்தால் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வங்கிகள் கல்விக் கடன் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கல்விக்கடன் விண்ணப்பங்களை வங்கிகள் தனியாக பெறக்கூடாது; வித்யாலட்சுமி இணையதளம் மூலமாகவே பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
வித்யாலட்சுமி இணையதளம் மூலம் பெறப்படும் கல்விக் கடன் விண்ணப்பங்களுக்கு கல்விக்கடன் வழங்காமல் வங்கி நிர்வாகங்கள் கிடப்பில் போடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, வித்யாலட்சுமி இணையதளம் மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு ஓராண்டாகியும் இந்தியன் வங்கி கல்விக்கடன் வழங்க முன்வரவில்லை.
அதேநேரத்தில் அந்த மாணவரின் விண்ணப்பத்தையும் நிராகரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் அம்மாணவர் கல்விக் கட்டணத்திற்காக மாற்று ஏற்பாடுகளையும் செய்ய முடியாமல் திணறி வருகிறார். இது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட ஒரு மாணவரின் நிலைமை மட்டுமே. இதேபோல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்விக்கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற்றுத் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சென்னையில் செயல்பட்டு வரும் கல்விக்கடன் செயல் குழு ((Education Loan Task Force - ELTF)) என்ற அமைப்பின் நிர்வாகிகள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வாலை நேரில் சந்தித்து கல்விக் கடன் பெறுவதில் தமிழக மாணவர்கள் அனுபவித்து வரும் சிக்கல்கள் குறித்து விளக்கினார்.
அதை ஏற்ற மத்திய அமைச்சர் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதில் அலட்சியம் காட்டக்கூடாது என்று வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனாலும் பழைய நிலையே தொடருகிறது.
வித்யாலட்சுமி இணையதளம் திட்டத்தை அறிவித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ‘‘ பணம் இல்லை என்பதற்காக எந்த மாணவரும் உயர்கல்வி வாய்ப்பை இழக்கவில்லை என்ற நிலையை ஏற்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். அதற்காகத் தான் வித்யாலட்சுமி இணையதளம் தொடங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய மாணவர்கள் அனைவருக்கும் கல்விக்கடன் என்பது உறுதி’’ என்று கூறினார்.
ஆனால், மத்திய அரசின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் தான் வங்கிகளின் செயல்பாடுகள் உள்ளன. இதேநிலை நீடித்தால் தகுதியுள்ள மாணவர்களுக்குக் கூட உயர்கல்வி வாய்ப்பு எட்டாக்கனியாகும் ஆபத்து இருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கல்விக்கடனுக்காக விண்ணப்பம் செய்த தகுதியுடைய மாணவர்கள் அனைவருக்கும் விரைவாகக் கல்விக்கடன் வழங்கும்படி வங்கிகளுக்கு ஆணையிட வேண்டும். இதன்மூலம் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.