அமெரிக்காவில் இனி தமிழ் ஆய்வு செழிக்கும் : ஹார்வர்டு பல்கலைக்கு ரூ10 கோடி வழங்க முதல்வர் உத்தரவு

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (அக்டோபர் 27) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழ்மொழி தொன்மை வாய்ந்தது. திராவிட மொழிகளுக்குத் தாய்மொழியாக விளங்குவது. இலக்கண, இலக்கியங்களை தன்னகத்தே கொண்ட ஏற்றமிகு மொழி, தமிழ்மொழி. எவரும் ஏந்தி மகிழும் இனியமொழி. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஆனால் நம் தமிழ்மொழிக்கு இருக்கும் சிறப்புகள் வேறு மொழிகளுக்கு நிச்சயமாக இருக்காது.

தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் ஜெயலலிதா அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர்.

இது சம்பந்தமாக நிதியுதவி வேண்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரியதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டுசெல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று ஒருதனி இருக்கை ஏற்படுத்தப்படும் என்றுஅறிவித்தார்.

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் உலகத்தில் வாழும் அனைத்து தமிழ்ச முதாயத்தின் வேண்டுகோளினை பரிசீலனை செய்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதிவழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த இருக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுதல், ஆராய்ச்சிக் கல்வியில் தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலகங்களிலும், ஆவணக் காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தமிழ்மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு மூலமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய, இலக்கண ஆய்வு செழிக்க வழி பிறந்திருக்கிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close