தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், ஏரிகள், குளங்கள் ஓரளவுக்கு நிரம்பி வருகின்றன. ஆனால் தூத்துக்குடி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் மட்டும் போதிய அளவு மழை பெய்யவில்லை. அடுத்த (அக்டோபர்) மாதம் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இன்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடல் பகுதியில் உருவாகி தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலைகொண்டிருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திராவின் வடக்கு பகுதிக்கு நகர்ந்து சென்றுவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும்.
தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரை, தர்மபுரி 8 செ.மீ., ஒகேனக்கல் 7 செ.மீ., திருமங்கலம், பாலக்கோடு, பரூர் 6 செ.மீ., ஏற்காடு, பெனுகொண்டாபுரம், கிருஷ்ணகிரி, ராசிபுரம், தளி 5 செ.மீ., கள்ளக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பட்டி, மாரண்டகள்ளி 4 செ.மீ., மதுரை தெற்கு, உளுந்தூர்பேட்டை, வாணியம்பாடி, ஆர்.கே.பேட்டை, திருப்பத்தூர், வாழப்பாடி, ஆம்பூர், பையூர், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. இதைத்தவிர 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.