கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களா உள்ளது. அங்கு, காவலில் இருந்த ஓம் பகதூர் என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். எஸ்டேட் பங்களாவும் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், அவருடன் காவல் பணியில் இருந்த கிருஷ்ணா கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

இச்சம்பவங்களும், அதன் நீட்சியாக நடைபெற்று வரும் சம்பவங்களும் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இக் கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக சந்தேகிக்கப்படும் கனகராஜ் மற்றும் சயான் என்பவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால், சேலம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் பலியானார். அதேபோல், கேரள மாநிலம் பாலக்காடு அருகே தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த சயான் என்பவரும் சாலை விபத்தில் சிக்கினார். இதில், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் தப்பிய சயான் கைது செய்யப்பட்டு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, தீபு, சதீஷன், சந்தோஷ், உதய குமார், ஜிதின் ஜாய், ஜெம்சீர் அலி, மனோஜ் சமி, வாளயார் மனோஜ், ஜிஜின் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சயானையும் சேர்த்து இச்சம்பவம் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கனகராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பதிரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

×Close
×Close