பாலில் ரசாயனக் கலப்படம் : உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை - மு.க.ஸ்டாலின் பேட்டி.

முன்கூட்டியே அவருக்கு இதுபற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே, இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறாரே?

நான் மட்டுமல்ல எல்லா கட்சிகளின் தலைவர்களும் கண்டித்து இருக்கிறார்கள். அவர்களது சாதனை என ஒன்றையும் சொல்ல முடியவில்லை என்பதால், அதனை மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்திருக்கக் கூடியவர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் ஆகியோருக்கு நிச்சயமாக இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மதவாத உணர்வை புகுத்துவதற்கு பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அதில் ஒன்றாக இதனை அறிவித்து இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதனை திரும்பப்பெற வேண்டும்.

தனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

நான் கேட்கும் ஒரே கேள்வி, இதே அதிமுக ஆட்சியில் ஆவின் பாலில் கலப்படம் செய்த மிகப்பெரிய ஊழல் குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்றது. அது என்னவானது? அப்படிப்பட்ட நிலையில், பால்வளத்துறை அமைச்சர் தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், முன்கூட்டியே அவருக்கு இதுபற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? எனவே, இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close