தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று அளித்துள்ள பேட்டியில், "தமிழகத்தில் ஆவின் பால் தவிர, அனைத்து தனியார் நிறுவன பால் உற்பத்தியின் போதும், இறந்துபோனவர்களின் உடலைப் பதப்படுத்தும் ரசாயனம் கலக்கப்படுகிறது. இதனைக் குடித்தால் கேன்சர் வரும். காலையில் எழுந்தவுடன் குழந்தைகள் முதலில் கேட்பது பால் தான். ஆனால், அந்த பாலில் இதுபோன்ற ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இதனால் தான், இப்போதெல்லாம் நிறைய குழந்தைகளுக்கு கேன்சர் வருகிறது.
நான் நிறைய இடத்தில் விசாரித்துவிட்டேன். ரசாயனம் கலப்பது உறுதி தான். உண்மையான பால் என்றால், 5 மணி நேரத்தில் கெட்டுப் போக வேண்டும். ஆனால், நாள்கணக்கில் கெடாமல் இருப்பதற்கு பெயர் பாலா? இதிலிருந்தே அது ரசாயனம் கலக்கப்பட்ட பால் என்று தெளிவாக தெரிகிறது.
இதுகுறித்த ஆதாரங்களை நான் திரட்டி வருகிறேன். அதன்பின், நிச்சயம் அந்த தனியார் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சரே, இப்படி வெளிப்படையாக ஆவின் பால் தவிர அனைத்து தனியார் நிறுவன பால் உற்பத்தியிலும் ரசாயனம் கலக்கப்படுகிறது என்று கூறியிருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்படியெனில், இவ்வளவு நாள் தனியார் பால் நிறுவங்களின் பாக்கெட் பாலை வாங்கிக் குடித்த மக்களின் நிலை? அதனைக் குடித்த குழந்தைகளின் நிலை? அமைச்சர் இப்படி கூறியிருக்கும் பட்சத்தில், இனி தமிழக மக்கள் தனியார் பாலை வாங்க நிச்சயம் அஞ்சுவார்கள். அப்படியெனில், இன்று முதல் அனைத்து ஆவின் ஸ்டோர்களிலும், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் போதுமான அளவிற்கு ஆவின் பால் கையிருப்பதில் உள்ளதா? என்பதை அமைச்சர் தான் விளக்க வேண்டும்