சென்னை இன்ஃபோஸிஸ் அலுவலக கழிவறையில் நிர்வாணமாக இறந்து கிடந்த ஊழியர்!

இளையராஜாவிற்கு எந்த கெட்ட பழக்கமும், தற்கொலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை

செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள இன்ஃபோசிஸ் ஐ.டி. நிறுவனத்தில், கடந்த ஐந்து வருடங்களாக மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர் இளையராஜா(31). இவர் விழுப்புரம் மாவட்டம் வல்லம் அருகே உள்ள தளவாழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இளையராஜாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இளையராஜா இறந்து கிடந்ததாகக் கூறி, அந்நிறுவன ஊழியர்கள் அவருடைய சடலத்தை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டுச் சென்றனர். இந்த தகவல் அவருடைய குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேரில் வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவருடைய சடலத்தை பார்த்து கதறி அழுதனர். மேலும், அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சாவில் மர்மம் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பின் சாலை மறியல் கைவிடப்பட்டது. அவருடைய உறவினர் இதுப்பற்றி கூறும்போது, “இளையராஜாவிற்கு எந்த கெட்ட பழக்கமும், தற்கொலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அவருடைய சாவில் மர்மம் இருப்பதால் இதற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும் வரையில் உடலை வாங்கமாட்டோம்” என கூறினார்.

இளையராஜா விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close